கேரள மாநிலம் கோழிக்கோடில் துபாயில் இருந்து 190 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

நேற்றிரவு முதல் இன்று காலை அதிகாலை வரை நடந்த மீட்புப் பணிகளை அடுத்து தற்போது சம்பவம் நடந்த இடத்தில் விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்து விசாரணை பணியகம், விமானப் போக்குவரத்து ஆணையகம், விமானப் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இந்த விபத்து. 

கொரோனாவால் சர்வதேச விமானப் போக்குவரத்து முடங்கிக் கிடக்க, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அரபு நாடுகளில் தத்தளித்த இந்தியர்களை மீட்டு வந்த விமானம் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான சம்பவம் தான் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றி வெளியான, முதற்கட்ட தகவல்களில், மோசமான வானிலையே விபத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இருப்பினும், கோழிக்கோடு விமான நிலையம் அமைந்துள்ள பகுதி மேடு பள்ளங்கள் நிறைந்த உயரமான இடமாகும். இங்கு அமைக்கப்பட்டுள்ள விமான ஓடுதளமும் டேபிள் டாப் என்ற வகை ஓடுதளமாகும். ஓடுதளத்தில் ஆரம்பம் மற்றும் முடிவுப் பகுதிகளில் கிடு கிடு பள்ளங்கள் அமைந்துள்ளன. இந்த ஓடுதளத்தில் விமானத்தை இறக்குவது சவாலானது. மிக்க அனுபவமிக்க விமானிகளே இப்படிப்பட்ட இடங்களில் விமானத்தை இயக்குவது வழக்கம். சவாலான இடத்தில், மோசமான வானிலைக்கு மத்தியில் தரையிறக்க முயன்றதே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக முதலில் விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுத்ததே தவறு என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது. நேற்று இரவு கன மழை மற்றும் இரவு நேரம் என்பதால் விமானத்தை தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முதல் முறை தரையிறக்கும் முயற்சி தோல்வியடைய விமானி சாத்தே வானிலேயே வட்டமடித்துள்ளார்.

இந்த விமானி தீபக் சாத்தே, இந்திய விமானப் படையில் 22 ஆண்டுகள் பணியாற்றி, சிறந்த விமானி என்ற விருதும் பெற்றவர். 2003-ல் விமானப் படையில் ஓய்வு பெற்ற பின் கடந்த 17 ஆண்டுகளாக ஏர் இந்தியாவில் பணியாற்றி வருகிறார். 59 வயதான சாத்தே, 39 வருடங்கள் விமான ஓட்டியாக மிக மிக அனுபவம் வாய்ந்தவர்.

வானில் வட்டமடித்த அவர், மீண்டும் தரையிறக்க முயற்சிக்கும் முன், விமானத்தில் உள்ள பயணிகளிடம் பேசிய சாத்தே, தரையறக்குவது சவாலாக உள்ளது ஆனாலும் தைரியமாக இருங்கள்; பத்திரமாக தரையாக்கி விடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால் விமானம் ஓடுதளத்தில் வேகமாக இறங்கிய நிலையில், மழை நீர் காரணமாக வழுக்கிச் சென்றதையறிந்த விமானி, விமானத்தை சடனாக நிறுத்தினால் தீப்பிடிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்தே, சமயோசிதமாக ஓடுதளத்தின் கடைசி வரை ஓடச் செய்து சுவரிலும் மோதச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வேகம் குறைந்த நிலையில் விமானம் சுவரில் மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டாலும் முன் பகுதி சேதமடைந்து பைலட்கள் இருவரும் முதல் பலி ஆகியுள்ளனர். அதிர்வில் விமானம் இரண்டு துண்டான் நிலையில் உள்ளே இருந்த பயணிகளும் பலத்த காயம் பட்டு அதில் 18 பேர் வரை உயிரிழந்திருப்பது சோகம் நிகழ்ந்துள்ளது.அதே வேளையில் துணிச்சலாக விமானத்தை தரையறக்கிய விமானி சாத்தே, ஓடுபாதையில் விமானம் தாறுமாறாக வழுக்கிச் செல்வதையறிந்து சமயோசிதமாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. பதற்றப்பட்டு விமானத்தை அவசரமாக நிறுத்த முயன்றிருந்தால் விமானம் வெடித்து தீப்பற்றி பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் என்பதாலேயே தன் உயிர் போனாலும் பரவாயில்லை என விமானத்தை ஒடுபாதையின் கடைசி வரை ஓடச் செய்து சுவற்றில் லேசாக மோத விட்டு உயிர்த்தியாகம் செய்து பல பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளதாக உயிர்தப்பிய பயணி ஒருவரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங், ``வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபையிலிருந்து 190 பயணிகளுடன் கோழிக்கோடு வந்த இந்த விமானத்தை விமானி தரையிறக்க முயற்சிக்கும்போது அங்கிருந்த மழைக்கால சூழ்நிலையின் காரணமாக சறுக்கிவிட்டது. விமானத்தில் தீப்பிடித்திருந்தால் மீட்புப்பணிகள் இன்னும் கடினமானதாக இருந்திருக்கும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.