அமெரிக்காவில் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் முன்கூட்டியே தங்கள் வாக்கைச் செலுத்திய நிலையில் இன்று நேரடி வாக்குப்பதிவு நடக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரடி வாக்குப்பதிவுகள் நடைபெறும் நிலையில் தேர்தலுக்கு முன்னரே 9 கோடிக்கும் அதிகமானவர்கள் முன் வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளனர். மேலும், தபால் ஓட்டுகள் மூலமாகவும் மக்கள் தங்கள் வாக்கைச் செலுத்தியுள்ளனர் என்று புளோரிடா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று மட்டும் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முக்கிய மாகாணங்களான புளோரிடா, பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பிடனுக்கே அமோக ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், நியூயார்க் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பிலும் ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளார்.

எழுபத்தேழு வயதாகும் ஜோ பிடன் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும், எழுபது நான்கு வயதாகும் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும் சரித்திரம் படைக்கலாம்

அமெரிக்காவில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும், நவம்பர் 3 ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று துவங்கியுள்ளது. இதன்முடிவில், அமெரிக்கா தனது 45 வது அதிபரை தேர்வு செய்ய உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வாக்காளர்களை கவர அதிபர் டொனால்ட் ட்ரம்பும் அவரது ஜனநாயக கட்சி எதிரணி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இருவரும் கடைசி வரை கடும் முயற்சிகளை எடுத்தனர்.

இந்தியாவைப் போலல்லாமல், அமெரிக்காவில் தேர்தல் நாளிலேயே ரிசல்ட் தெரிந்துவிடுகிறது.

அமெரிக்காவில் வாக்களிப்பை துவங்கும் இடம் வெர்மான்ட் நகரம்தான். அங்கு இந்திய நேரப்படி காலை 10.45 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியுள்ளது. நியூயார்க் மற்றும் வடக்கு டகோட்டாவில் இரவு 9 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி நவம்பர் 4 காலை 6:30 மணிக்கு நிறைவடையும்.

அமெரிக்க அதிபர் தேர்தல்கள் அனைத்து முக்கிய சர்வதேச தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும் (வியோன், பிபிசி, சிஎன்என், அல் ஜசீரா ஆங்கிலம் போன்றவற்றில்) ஒளிபரப்பப்படும். அமெரிக்காவில் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 257 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர், கிட்டத்தட்ட 240 மில்லியன் குடிமக்கள் ஓட்டுப் போட தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே 9.2 கோடி அளவுக்கான மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர்.

நவம்பர் 3ம் தேதி வாக்களிப்பு நிறைவடையும் என்றாலும், இவை பாப்புலர் ஓட்டுக்கள் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் அவை அமெரிக்காவின் அதிபரை நேரடியாக தீர்மானிக்கும் ஓட்டு அல்ல. இந்த வாக்குகள் அடிப்படையில் உருவாகும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுதான் அதிபருக்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சத்தால், கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடிவு செய்தனர். பொதுவாக, அந்த அஞ்சல் வாக்குகள் எண்ணுவதற்கு அதிக நேரம் எடுக்கும். தேர்தல் ஊழியர்கள் வாக்குச்சீட்டை எடுக்க வேண்டும், பிழைகளை சரிபார்க்க வேண்டும், அவற்றை வரிசைப்படுத்த வேண்டும். எனவே இதற்கு காலதாமதம் பிடிக்கும்.