கொரோனா வைரஸின் மோசமான மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் 
தொடர்ச்சியாக முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 41 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,46,185 பேர்  அமெரிக்காவில் மட்டும் உயிரிழந்துள்ளனர். 

`இந்த வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் அனைத்து பாதிப்புகளுக்கும் சீனாதான் காரணம்' என அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார். முதல் சில மாதங்களுக்கு, இந்த வைரஸை `சீனா வைரஸ்' என்றே சொல்லி வந்தார் ட்ரம்ப். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து இருந்துக் கொண்டே வருகிறது. 

இதனிடையே, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் விரைந்து தடுப்பூசி கண்டுபிடிப்பது அவசியமாகியுள்ளது. சமீபத்தில் பிரிட்டென் ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருத்து, உலகளவில் முதலிடத்தில் இருந்து வருகின்றது. 

இந்நிலையில், ``கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சீனா உள்ளிட்ட எந்த நாடேனும் நல்ல முடிவைப் பெற்றால் அவற்றுடன்  இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

மேலும் ``தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும், கொரோனா சிகிச்சை முறையிலும் அமெரிக்கா மேம்பட்டு வருகின்றது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனடியாக அது பயன்பாட்டுக்கு வரும். அதன் விரைவான விநியோகத்திற்கு அமெரிக்க ராணுவம் உதவும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் வைத்து இதுபற்றி அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருக்கிறார். அப்பேட்டியின் போது, மேலும் பேசிய ட்ரம்ப் ``கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்க்கையை இழந்த ஒவ்வொரு நபரையும் குடும்பத்தில் ஒருவராக நினைத்து வருந்துகிறோம். வைரஸ் தடுப்பு மருந்தை விரைவில் உருவாக்கி வைரஸை தோற்கடிப்போம் என உறுதியளிக்கிறேன். இந்த நோயைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டோம். பாதிப்படைந்தவர்களை நாங்கள் பாதுகாப்போம்.

கொரோனாவுக்கான பரிசோதனை விஷயத்தில் அமெரிக்காதான் உலகில் முன்னனியில் உள்ளது. நாங்கள் 50 மில்லியனுக்கு அதிகமான பரிசோதனைகளை செய்யப்போகிறோம். இரண்டாவதாக இந்தியா 12 மில்லியன் சோதனைகளை செய்துள்ளது. இன்னும் சில நாடுகள் ஏழு மில்லியன், ஆறு மில்லியன், நான்கு மில்லியன் என சோதனைகளை செய்துள்ளன. மிகப்பெரிய அளவில் நாங்கள் சோதனைகளை மேற்கொண்டுள்ளோம்.

சீனா, தன் ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸை வெளியேற விட்டிருக்கக் கூடாது. ஆனால், வெளியேற விட்டுவிட்டது. தற்போது இந்த வைரஸ் உலகத்தையே பாதித்து வருகிறது. ஆனால், நாங்கள் அதைக் கவனித்துக்கொள்ளப் போகிறோம். மற்ற நாடுகளுக்கும் உதவி செய்கிறோம்” என்றார்.

நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் அமெரிக்காவின் பல மாநிலங்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ``ஆனால், சில மாநிலங்கள் மோசமாகச் செயல்பட்டு வருகின்றன. நாம் வைரஸை எதிர்த்து போராடி மேம்படுவதற்கு முன்பு துரதிர்ஷ்டவசமாக இந்த நிலைமை இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இளைஞர்கள் பெரும்பான்மையானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. வைரஸ் பாதிப்பு இருப்பது அவர்களுக்கே தெரியாது. எனவே, இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். வைரஸால் இறப்பவர்களில் 99.6 சதவிகிதம் பெரியவர்கள் என்பதால் வயது குறைந்தவர்களுக்கு மிகச்சிறய அளவிலேயே பாதிப்புகள் ஏற்படுகின்றன. நோயைப் புரிந்துகொண்டு சிகிச்சையளிப்பதன் மூலம் அமெரிக்காவில் இறப்புகளை அதிகளவில் குறைக்க முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கட்டத்திலும் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பான சிறந்த வழிமுறைகளை நாங்கள் கற்றுக்கொண்டோம். இந்த வழிமுறைகள் குறித்து உலகளவில் உள்ள மருத்துவ நிபுணர்களுடம் பகிர்ந்துகொண்டோம் என்றும் மற்ற நாடுகளுடன் வலிமையான உறவை பேணி வருகிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறோம் என்றும் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ட்ரம்ப்பின் இந்த பேட்டி, இரு நாட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் மோதலை தடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

- ஜெ.நிவேதா