100 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்து.. தமிழகத்தை உலுக்கிய காசி வழக்கில், காசியின் நண்பர் தினேஷுக்கு ஜாமீன் கிடைத்து உள்ளது. 

சென்னையில் பெண் டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றி ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், காசியை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

இதனையடுத்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து காசியை விசாரித்து வருகின்றனர். அதன்படி, காசியால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மெம்மரி கார்ட், காசி பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

மேலும், காசியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து காசியின் நண்பன் டேசன் ஜினோவை போலீசார் கைது செய்து, அவனிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி, காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் பற்றிய பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது. 

குறிப்பாக, காசியை மிஞ்சும் அளவுக்கு அவனது நண்பன் தினேஷ், பல பெண்களை ஏமாற்றியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்ததும், பல பெண்களின் ஆபாசப் படம் அவனிடம் இருப்பதாகவும் தெரியவந்தது. 

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் காசியின் நண்பனும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருமான தினேஷை அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், “காசியின் வக்கிர புத்தி தெரிந்ததும் பல பெண்கள் அவரின் தொடர்பைத் துண்டித்து வந்துள்ளனர். இதனையடுத்து, தன்னிடமிருந்து விலகிச் செல்லும் பெண்களின் செல்போன் நம்பரை காசி, தன்னுடைய நண்பர் தினேசுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அப்படி, வரும் பெண்களின் செல்போன் நம்பரை வைத்து, அந்த பெண்களை தினேஷ் தொடர்பு கொண்டு மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். 

அதன்படி, “காசியிடம் பேசவில்லை என்றால், உங்கள் சம்மந்தப்பட்ட ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாக” மிரட்டி வந்திருக்கிறார். 

இந்த மிரட்டலுக்குப் பயந்து சில பெண்கள், காசியின் தொடர்பைத் துண்டிக்க முடியாமல், கடும் இன்னலுக்கு ஆளாகித் தவித்து வந்துள்ளனர். அத்துடன், காசியுடன் பழகி வந்த பல பெண்களை மிரட்டி, தினேஷ் தனியாக பாலியல் பலாத்காரம் செய்து, அவனும் தன் பங்கிற்கு ஆபாசப் படங்களை எடுத்து வைத்துக்கொண்டு, காசியைப் போலவே மிரட்டி வந்ததும்” விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பாக, “காசி தொடர்பாகப் புகார் அளிக்கத் துணிந்த ஒரு இளம் பெண்ணை, காசி மற்றும் அவனது கூட்டாளிகளான தினேஷ், அவனது நண்பன் என 3 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கடத்தி, அந்த பெண்ணின் செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்ததும்” தெரியவந்தது. 

அதேபோல், காசியின் கூட்டாளிகள் இன்னும் சிலர் பெண்களை மிரட்டி உள்ளதும் தற்போது விசாரணையில் தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாகவும் தினேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், “ஜாமீன் வழங்க வேண்டும்” என்று, தினேஷ் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் போலீசார் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து உள்ளேன். சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் நான் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறேன். என் மீது கொடுத்த பொய்யான புகாரின் அடிப்படையில் இந்த வழக்கைப் பதிவு செய்ததால், தொடர்ந்து நான் சிறையிலிருந்து வருகிறேன். இதனால், எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் “மனுதாரர் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடந்து வருகிறது என்றும், மனுதாரர் மற்றும் அவரது நண்பர் காசியிடம் இருந்து லேப் டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் 100 க்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்துகொண்டது பதிவாகி இருப்பதாகவும்” தெரிவித்தனர். அத்துடன், இவர்கள் மீது மேலும் சில வழக்குகள் உள்ளன என்றும், இதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என்றும் கூறினர்.

அதன் தொடர்ச்சியான தினேஷ் க்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர், “தினேஷ் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது என்றும், ஆனாலும் இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், இதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்றும், வாதாடினார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இந்த வழக்கின் விசாரணை மந்தமாக நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த வழக்கின் தீவிரத்தை அறியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை அதிகாரி செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது” என்றும், கவலைத் தெரிவித்தார். 

“வழக்குப்பதிவு செய்து 90 நாட்களுக்கு மேல் ஆகியும், கீழ் நீதிமன்றத்தில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? என்றும், குறைந்தபட்சம் இடைக்கால அறிக்கையாவது தாக்கல் செய்திருக்கலாமே?” என்றும், நீதிபதி கேள்வி எழுப்பினார். அதன் தொடர்ச்சியாக தினேஷ் க்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.