கொரோனா வைரஸ், உலகத்தையே டிஜிட்டல் மயமாக மாற்றியிருக்கிறது. அதனாலேயோ என்னவோ, டிஜிட்டல் ரீதியான ஹேக்கிங், தடைகள், குற்றங்கள் யாவும் கடந்த 6 மாதங்களாகவே அதிகரித்துக் காணப்படுகின்றன.

சமீபத்தில் இந்தியாவில் பொது மக்கள் மத்தியில் 59 செயலிகள் மீது விதிக்கப்பட்ட தடை, பின் ராணுவ வீரர்கள் மத்தியில் 89 செயலிகள் விதிக்கப்பட்ட தடை, பின் ஜோக்கர் மால்வேர் வந்ததைத் தொடர்ந்து கூகுள் நீக்கிய செயலிகள் என டிஜிட்டல் சாதனங்கள் மீதான பாதுகாப்பின்மை அதிகரித்துக் கொண்டே வந்தது.

இப்போது இவற்றைத் தொடர்ந்து, டிஜிட்டல் கணக்குகள் மீதான பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. ஆம், நேற்றைத் தினம் உலக தலைவர்கள் பலரின் டிஜிட்டல் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன், கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் ராப்பர் கன்யே, பிரபலங்களான கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி கிம் கர்தாஷியன் வெஸ்ட் உள்ளிட்ட உலகின் முக்கிய புள்ளிகள் பலரின் டுவிட்டர் கணக்குகளை மோசடி கும்பல் திடீரென ஹேக் செய்து முடக்கியுள்ளது. இதேபோல் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் கணக்குகளையும் ஹேக் செய்திருக்கிறார்கள் ஹேக்கர்கள்.

இதைத்தொடர்ந்து உலக அளவில் ஹேக் என்பது இணையசெயல்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே மாறியுள்ளது. குறிப்பாக அரசியல் தலைவர்களின்  தனிப்பட்ட இணையத்தில் கூட ஹேக்கர் ஊடுருவிவிடுயிருப்பது, பொது மக்களிடம் மாபெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சரி, விஷயத்துக்கு வரலாம்! இப்படி ஹேக் செய்யப்பட்ட அக்கௌண்ட் அனைத்திலும், ஹேக்கர்கள் ``நாங்கள் உங்களுக்கு பிட்காய்ன் மூலம் இரண்டு பணம் வழங்குகிறோம். நீங்கள் ஆயிரம் டாலர் அனுப்பினால், 2 ஆயிரம் டாலர் திரும்ப வழங்குவோம். 30 நிமிடத்திற்குள் திரும்ப வழங்கப்படும்" என்று பதிவிட்டு ஒரு பிட்காய்ன் லிங்கையும் அனுப்பியுள்ளனர். பிட்காயின் நிறுவனத்தின் லிங்க்கை அனுப்ப வேண்டிய அவசியம் என்னவென்று தற்போது அமெரிக்காவில் உள்ள உளவுத்துறை போலீசார் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நம்மூர் பண மோசடி லிங்க்கை போலத்தான், இந்த பிட்காயின் மோசடி!

`பிட்காய்ன் ஸ்கேம்` என்று அழைக்கப்படும் இந்த ஹேக் சம்பவத்தில் ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகளிலிருந்து 'பிட்காயின்' எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடைகள் வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. "எல்லாரும் என்னைப் பணம் வழங்கச் சொல்லிக் கேட்கிறார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது" என்றெல்லாம் பில்கேட்ஸ் கணக்கிலிருந்து ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. 

அதேபோல, ஒபாமாவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து, ‘கொரோனாவின் காரணமாக நான் என்னுடைய சமூகத்துக்கு எல்லாத்தையும் திரும்ப வழங்கப் போகிறேன். என்னுடைய முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள எல்லா பிட்காயின்களையும், நான் இரட்டிப்பாகத் திரும்ப அனுப்பப் போகிறேன்’ எனக் கூறப்பட்டுள்ளது.

ட்வீட்டுகள் பதியப்பட்ட சில நிமிடங்களில் பிரபலங்கள் சுதாரிக்கத் தொடங்கி, சூழலைச் சரிசெய்ய எண்ணி ட்வீட்டை நீக்கிவிட்டனர்.

இது குறித்து விளக்கமளித்த ட்விட்டர் நிர்வாகம், ``ட்விட்டர் கணக்குகளில் ஏற்பட்ட ஹேக் குறித்து நாங்கள் விசாரணை செய்துவருகிறோம். அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். விரைவில் இதுகுறித்து விளக்கமளிப்போம்" எனக்கூறியுள்ளது. இப்போதைக்கு, ``இது தனிநபர் செய்த வேலையல்ல, குழுவான நபர்கள் இனைந்து செய்திருக்கின்றனர்" என்று மட்டும் கூறப்பட்டுள்ளது

ட்விட்டரின் தலைவர், ``இன்றைய தினம் எங்களுக்கு மிக மோசமான தினம்" என்று நேற்று கூறியிருந்தார்.

பிரபலங்களின் கணக்கே இப்படி பணமோசடி கும்பலால் முடக்கப்பட்டிருப்பது, பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

- பெ. மதலை ஆரோன்