தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில், தந்தை மகன் இறப்பைத் தொடர்ந்து, 7 வயது சிறுமி தற்போது மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். சாத்தான்குளத்தை அடுத்துள்ள கல்விளை என்ற பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள  கால்வாய் பாலத்துக்கு அடியில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறாள். சிறுமியின் உடல் அங்கிருக்கும் தகவலறிந்து, விரைந்து வந்த போலீசார் உடலைக்  கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

சிறுமியின் உடலின் பல இடங்களில் காயங்கள் இருப்பதால் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஊர்மக்கள் சந்தேகம் எழுப்பத் தொடங்கினர். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 பேரைக்  கைது செய்து விசாரிக்கத் தொடங்கியிருந்தனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருமே, 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒருவர் முதலாம் ஆண்டு கல்லூரி படித்து வரும் நபர். இருவருமே போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பதும், அதேபோல் கிராமத்தில் பல்வேறு விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை அப்பகுதி மக்கள் வைக்கின்றனர். 

விசாரணை முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், ``கைது செய்யப்பட்டவர்கள், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்கள் தரவில்லை என்கின்றனர். ஆனால் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகே எதையும் எங்களால உறுதியா சொல்லமுடியும். தற்போது அதற்கான அடையாளங்கள் இல்லை என்று தடயவியல் நிபுணர்கள் கூறுயிருக்காங்க” என்றார்.

இப்போது சிறுமியின் உடல், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

7 வயதேயான ஒரு பெண் குழந்தையை, இளைஞர்கள் இப்படி கொடூரமாகக் கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் என்றாலே, பயப்படும் அளவுக்குத்தான் இந்தச் சம்பவங்களெல்லாம் இருக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன், அறந்தாங்கி பகுதியில் ஜெயப்பிரியா என்றொரு குழந்தை இதேபோல கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தாள். ஜெயர்ப்பிரியாவின் மரணத்தில், பாலியல் வன்புணர்வு குற்றமும் பின் இருந்தது. இப்போது இறந்திருக்கும் சிறுமிக்கு, அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது மட்டுமே இரு வழக்கிலும் இருக்கும் ஒரேயொரு வித்தியாசம். மற்றபடி, குழந்தைகள் மீதான வன்முறையின் அடிப்படையில் இரண்டுமே கொடூரத்தின் உச்சம்தான்.

 

2018-ம் ஆண்டில் மட்டும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகம் பதியப்பட்ட மாநிலங்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடம் தமிழகத்துக்குத்தான். 1,457 வழக்குகளைப் பதியப்பட்டிருந்தது நம் ஊரில்! அந்த வருடத்தில் இந்தியாவில் பதியப்பட்ட வழக்குகள், 39,827

 

இந்தியாவில் போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், தண்டனை விதிக்கப்படும் விகிதம் வெறும் 31.6 % தான். 2018 -ல் மட்டும், தமிழகத்தில், தண்டனை வழங்காமல் முடித்துவைக்கப்பட்ட குழந்தைக்கு எதிரான  வழக்குகளின் எண்ணிக்கை, 1,935. தேசிய குற்ற பதிவு பணியகத்தின் 2018 கணக்குப்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 109 குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதற்கு முந்தைய ஆண்டைவிட, 22 % அதிகமான குற்றங்கள் நடந்துள்ளதாக அறிவித்திருந்தது தேசிய குற்ற பதிவு பணியகம். இந்த வருஷம், இந்த சதவிகிதம் இன்னும் இன்னும் அதிகரித்திருக்கும் என்பதையே சிறுமி ஜெயப்பிரியா நமக்குக் காட்டியிருக்கிறார். 

- பெ. மதலை ஆரோன்.