மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் 
செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய போலீசாரே, சட்டத்தை மீறி பொதுமக்களைக் கண்மூடித் தனமாகக் கொலை வெறி தனமாகத் தாக்கும் சம்பங்கள் சாத்தான் குளம் உட்பட நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அது போன்ற மீண்டும் ஒரு சம்பவம், தற்போது மத்தியப் பிரதேசத்தில் அதுவும் விவசாயிகள் மீது தொடுக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டம் பகுதியில் அரசு கல்லூரி கட்டுவதற்காக விவசாயிகளின் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி வருகிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு சில விவசாயிகள் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுத்த நிலையில், பல விவசாயிகள் தங்கள் நிலத்தைத் தர முன்வரல்லை. மாறாக இந்த திட்டத்திற்கு அந்த பகுதி விவசாயிகள் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

அதன் படி, விவசாயிகள் நிலத்தை மிரட்டி வாங்கும் நோக்கத்தோடு போலீசாரின் படை பலத்தோடு களம் இறங்கிய அரசு அதிகாரிகள், அந்த பகுதியில் உள்ள ராஜு என்ற விவசாயின் நிலத்தை அதிகாரிகள் கைப்பற்ற முயன்று உள்ளனர். அரசு அதிகாரிகள் இந்த அதிகார அத்துமீறலால், பயந்துபோன இந்த பரிதாபத்திற்குரிய விவசாயி, “இப்போது தான் பயிரிட்டுள்ளேன். பயிர் வளரும் வரை காத்திருங்கள் ஐயா. அதன் பிறகு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று, அதிகாரிகளிடம் அந்த விவசாயி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், விவசாயி ராஜூ கெஞ்சியதை துளியும் மதிக்காமல், அதிகார போதையில், நிலத்தில் களம் இறங்கிய அரசு அதிகாரிகள், முளைத்து விளைச்சலுக்கு ஆயத்தாமாகி வரும் பயிர்களை அழித்து விட்டு, அந்த நிலத்தை கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

இதனைத் தடுக்க முயன்ற விவசாயி ராஜூவை அங்கிருந்த போலீசார் தாக்கி உள்ளனர். இதனால், வாழ வழி தெரியாமல் கடும் விரக்தியடைந்த விவசாயி ராஜூவும் அவரது மனைவி சாவித்திரி தேவியும், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். 

விவசாயிகள் விஷம் குடிக்கும் வரை வேடிக்கை பார்த்த அந்த அதிகாரிகளும் போலீசாரும், விவசாயி விஷம் குடித்த பிறகு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு, விஷம் குடித்த இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் முடிவெடுத்து, அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். 

ஆனால், பாதிக்கப்பட்ட அந்த விவசாயிகளோ, “எங்கள் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு, எங்களைக் காப்பாற்ற வேண்டாம்” என்று கூறிவிட்டு மருத்துவமனைக்குச் செல்ல மறுத்து விட்டனர். விவசாயிகள் இருவரும் மருத்துவமனைக்கு வர மறுத்தால் ஆத்திரமடைந்த அதிகாரிகளும், போலீசாரும், இவரும் மீது கொலை வெறித்தனமாக கொடூரமாகத் தாக்கி, அவர்கள் இருவரையும் தர தரவென்று இழுத்துச் சென்றனர்.

இதனைப் பார்த்த அந்த விவசியின் சிறு வயது பிள்ளைகள் 4 பேர், அந்த விவசாய நிலத்தில் கதறி அழுதனர். அந்த பிஞ்சு குழந்தைகள் அழுது துடித்த சம்பவம், அங்குக் கூடி நின்றவர்களைக் கண்ணீர் வடிக்கச் செய்தது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத அந்த அதிகாரிகளும், போலீசாரும் விவசாயிகள் இருவரையும் கடுமையாகத் தாக்கிவிட்டு ஆம்புலன்சில் ஏற்றினர்.

இதனையடுத்து, அவசர அவசரமாக அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த இரண்டு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் இருப்பதாகவும், அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. 

மேலும், விவசாயி ராஜூ - சாவித்திரி தேவி தம்பதிக்கு விவசாயத்திற்காக வாங்கிய 3 லட்ச ரூபாய் கடன் இருப்பதாகவும், இந்த நேரத்தில் அந்த நிலத்தையும் அரசு பறித்துக்கொண்டால், தற்போது வாழ்வதற்கு வழியில்லாத நிலை ஏற்படும் என்றும், அந்த பகுதி விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

விவசாயியிடமிருந்து அவருக்குச் சொந்தமான நிலத்தை, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அத்துமீறி பிடுங்கச் சென்ற அதிகாரிகளின் செயல்பாடுகளும், விஷம் அருந்திய இரு விவசாயிகளையும் போலீசார் கொலை வெறித் தனமாகத் தாக்கிவிட்டு தரதரவென்று இழுத்துச் சென்ற காட்சிகளும், அங்கு நின்றுகொண்டிருந்த சக விவசாயிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து, இணையத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இதனால், அந்த அதிகாரிகளின் அத்துமீறல்கள் இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பல்வேறு தரப்பினரும், அதிகாரிகள் மற்றும் போலீசாரின் இந்த அதிக அத்துமீறலுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இதனால், அந்த மாநில அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
 
இதனால், பயந்துபோன மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுக்கான், இந்த அத்துமீறல்களைத் தடுக்க தவறிய குணா மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுக்கான் தெரிவித்துள்ளார்.