2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. இப்படம் அமேசான் ப்ரைமில் தீபாவளி விருந்தாக, வரும் நவம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்திய விமானப்படையிடம் இருந்து NOC சான்றிதழும் கிடைத்துவிட்டது. 

சமீபத்தில் வெளியான ட்ரைலர் உலகளவில் ட்ரெண்டானது. சூர்யாவின் அசத்தலான நடிப்பு மற்றும் வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. ட்ரைலரை தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தின் மீதமுள்ள இரண்டு பாடல்களுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். சூரரைப் போற்று படத்தின் மலையாளம் மற்றும் கன்னட வெர்ஷனுக்கு நடிகர் நரேன் டப்பிங் பேசியுள்ளார். நடிகர் சத்யதேவ் தெலுங்கில் ஆகாசம் நீ ஹாதுரா எனும் பெயரில் வெளியாகும் சூரரைப் போற்று படத்திற்கு டப்பிங் செய்துள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. 

இந்நிலையில் படத்தின் முதல் டயலாக் ப்ரோமோ வெளியானது. அந்த ப்ரோமோவில், உயர் அதிகாரியான மோகன் பாபு சூர்யாவை பார்த்து சவால் விடுவது போல் அமைந்துள்ளது. மேலும் ப்ரோமோ காட்சியில் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். 

சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளில் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாடிவாசல் என்ற நாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது. 

சமீபத்தில் சூர்யா 40 திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார். இரண்டாவது முறையாக இயக்குனர் பாண்டிராஜுடன் இணைகிறார் சூர்யா.