“யூடியூபர் மதன் குமாரின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது என்றும், அந்த பேச்சுகளைக் கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி முன் ஜாமீன் வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு” சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை, சட்ட விரோதமாகப் பதிவிறக்கம் செய்து சில கும்பல்கள் விளையாடி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த சூழலில் தான், “பப்ஜி விளையாட்டில் உள்ள ட்ரிக்ஸ்” பற்றி பேசுவதற்காகக் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான், மதன் யூடியூப் சேனல்.

கடந்த 2 ஆண்டுகளாகக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், சமூக வலைத்தளங்களில் சிறுவர், சிறுமிகள் அதிகம் மூழ்கி உள்ளனர். அப்படியான சிறுவர் சிறுமிகளைக் குறிவைத்து ஆன்லைன் கேமான பப்ஜி, ப்ரீ ஃபையர் உள்ளிட்ட விளையாட்டில் நேரத்தைச் செலவிட்டு வந்தவர்களை, அவர் தன் பக்கம் அதிகமான கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

“மதன்' யூடியூப் சேனலுக்கு” இது வரை 7 லட்சத்திற்கு அதிகமாகவும், “டாக்ஸிக் மதன் 18+” யூடியூப் சேனலுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் Subcribers-ம் தற்போது உள்ளனர்.

 ஆன்லைனில் விளையாடும் போது, தன்னுடன் விளையாடும் சக போட்டியாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே கொண்டவர் தான் இந்த யூடியூபர் மதன்.

அத்துடன், தன்னுடன் ஆன்லைனில் விளையாடுவது பெண்கள் என்றால், அவரது வார்த்தைகளில் ஆபாசம் உச்சத்தில் இருக்கும்.

இப்படி, சென்னையில் பதிவான வழக்குகள் தொடர்பாக மதனை போலீசார் நேரில் ஆஜராகச் சொன்ன நிலையில் தான், அவர் நேற்றைய தினம் தலைமறைவானார்.

ஆனால், அவர் எப்போதும் போல வீடியோ கேமில் பங்கேற்று நேற்றைய தினம் விளையாடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

IP முகவரிகள் மூலம் இருப்பிடத்தைக் கண்டறிய முடியாத VIRTUAL PRIVATE NETWORK யை, மதன் பயன்படுத்தி வந்ததாதல் அவரின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியாமல் போலீசார் சிரமப்பட்டு வந்த நிலையில், பெருங்களத்தூரில் உள்ள மதன் வீட்டில் இருந்து அவரது தந்தை மாணிக்கம், சேலம் மாவட்டத்திலுள்ள அவரது மனைவி கிருத்திகா மற்றும் 8 மாதக் கைக்குழந்தையை அழைத்து வந்து, சென்னை சைபர் கிரைம் போலீசார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், “மதனும் கிருத்திகாவும் இணைந்து 3 யூடியூப் சேனல்களைத் தொடங்கி பப்ஜி விளையாட்டு குறித்து பேசி சேனலில் வெளியிட்டு வந்து உள்ளனர். ஆனால், அதில் போதுமான பார்வையாளர்கள் கிடைக்காத நிலையில், குறுக்கு  வழியில் விரைவில் பணம் சம்பாதிப்பதற்காக, பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசி மதன் வீடியோ வெளியிடத் தொடங்கியதாகவும், இதற்கு சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது எனறும், இதனால் மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வந்ததாகவும், அப்பட கிடைத்த பணத்தில் பெருங்களத்தூரில் 2 சொகுசு பங்களாக்கள், 2 சொகுசு கார்கள் வாங்கியதாகவும்” அவர் மனைவி கிருத்திகா கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர்கள் பயன்படுத்திய லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருள்களையும், இதன் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கிய 2 சொகுசு கார்கள், 2 பங்களா ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கணவர் மதன் குறித்த கேள்விக்கு கிருத்திகா உரிய பதிலளிக்கவில்லை என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மதனுக்கு உடந்தையாக இருந்த கிருத்திகாவை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வருகிற 30 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், முன் ஜாமீன் கோரி மதன் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன்பு சற்று முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை” என்றும் தெரிவித்தார்.

ஆனால், தமிழக போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மதனின் யூடியூப் சேனலை விரும்பி பார்ப்பவர்களில் 30 சதவீதத்தினர் பள்ளி மாணவர்கள் எனவும், ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளைக் கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார்” என்றும், குற்றம்சாட்டினர்.

அப்போது, மதனின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை கேட்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கடும் அதிர்ச்சியடைந்த நீதிபதி, “மதனின் பேச்சை காதுகொடுத்து கேட்கமுடியாத அளவிற்கு இருப்பதாக” நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். 

மேலும், “யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?” என மனுதாரர் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, வழக்கிற்காக சில பகுதிகளைக் கேட்டதாகப் பதிலளித்தார். 

இதனையடுத்து, “அந்த பதிவுகளை முழுமையாகக் கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி” நீதிபதி உத்தரவிட்டு வழக்கை நாளை தள்ளி வைத்தார்.