“இங்கே ஒரு உயிர் துடிக்கிறது, சீமான் என்ன செய்துகொண்டு இருக்கிறார்” என்று, தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக கேள்வி எழுப்பி 
உள்ளார்.

நடிகர்கள் விஜய் - சூர்யா இணைந்து நடித்த “பிரண்ட்ஸ்” திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கைச்சியாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. அதனைத் தொடர்ந்து சில படங்களில் அவர் தோன்றினார்.  

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, “நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்” என்று குற்றம் சாட்டி, பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, அவ்வப்போது, ஃபேஸ்புக் லைவ்வில் பேசும் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்களைக் கூறி வந்தார்.

மேலும், “என் கேள்விக்குப் பதில் சொல்வதைக் கூட, கேவலமாகக் கருதும் சீமான், எனக்குப் போதையில் தீராத தொல்லை கொடுத்திருக்கிறார்” என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

அத்துடன், “சீமான் பார்ப்பதற்கு நல்லவராகத் தெரிந்தாலும், அவர் குடிப்பார் என்பது பலருக்கும் தெரியாது என்றும், அவர் குடித்துவிட்டு, என்னைப் பலமுறை டார்ச்சர் செய்திருக்கிறார்” என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

ஆனால், இது எதைப் பற்றியும் கவலைப்படாத சீமான், ஒரு போதும் இது தொடர்பாகப் பதில் அளித்தது இல்லை. இதை ஒரு பொருட்டாகவும் அவர் கருதியதுமில்லை என்றும், கூறப்பட்டு வந்தது. 

அதே நேரத்தில், இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலெட்சுமியை நேரில் சந்தித்து, விஜயலட்சுமி புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பான விசாரணையும் ஒரு புறம் நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதன் தொடர்ச்சியாகக் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக்கில் புதிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். அதில், “நான், எனது அம்மாவுக்கும் அக்காவுக்காகவும் தான் உயிர் வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், தற்போது எனக்கு அந்த எண்ணமே இல்லை. என்னை, ஹரி நாடார் நாக்கை அறுத்து விடுவேன் என்று என்னைப் பற்றி மிகவும் இழிவாகப் பேசி மிரட்டுகிறார். 

என்னுடைய சாதி குறித்தும் அவர் இழிவாகப் பேசுகிறார். இதனால் சீமான் மீதும், ஹரி நாடார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும், அந்த வீடியோவில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைத்திருந்தார்.

மேலும், கடும் மன அழுத்தத்திற்கு ஆளான நடிகை விஜயலட்சுமி, வீடியோ வெளியிட்ட பிறகு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, அவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது, அவரிடம்  நீதிபதி வெங்கடேசன் நேரில் சென்று வாக்கு மூலம் பெற்றார்.

அதன் பிறகு, அங்கிருந்து அவர் போரூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை விஜயலட்சுமி, “ எனது தோழியான நடிகை காயத்ரி ரகுராம் தான், என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தார். காலை முதல் நான் ஏதும் சாப்பிடவில்லை. எனது சிகிச்சைக்கான பணத்தை காயத்ரி ரகுராம்தான் கட்டி உள்ளார். எனது அனுமதி இல்லாமல் எதற்காக என்னை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்கிறார்கள் என்று கூறவில்லை. எனக்குச் சிகிச்சை முடியாமலேயே வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்து விட்டனர்” என்றும் புகார் அளித்தார். 

அப்போது, அங்கிருந்த போலீசார் அவரை வீட்டுக்குச் செல்லும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்து, விஜயலட்சுமியை அவரது குடும்பத்தினர் காரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை விஜயலட்சுமி, “எந்த கட்சியும் என்னுடன் இல்லை. மக்கள் தான் என்னுடன் இருக்கிறார்கள். நான் இப்படியே சென்று உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்” என்று அறிவித்தார்.

மேலும், “தமிழ் தமிழ் என்று தமிழ் தேசியம் பேசும் சீமான், இங்கு நானும் ஒரு பெண் தானே. இங்கே ஒரு உயிர் துடிக்கிறது, சீமான் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” ஏன் அவருக்கு மனசு துடிக்கவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், சீமான் தரப்பிலிருந்தோ, ஹரி நாடார் தரப்பிலிருந்தோ என்னிடம் இதுவரை யாரும் சமாதான பேச்சு வார்த்தை நடத்த வில்லை” என்றும், குறிப்பிட்டார்.

குறிப்பாக, “நான் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக  ஹரி நாடாரும், சீமானும் இன்னும் ஏன் பொதுமக்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க வில்லை” என்றும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், எனக்கு நியாயம் கிடைக்கும் வரை, நான் விடப்போவதில்லை என்றும், என் போராட்டம் தொடரும் என்றும், நடிகை நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார். 

முக்கியமாக நடிகை விஜயலட்சுமி சீமான் மற்றும் ஹரி நாடார் மீது நடவடிக்கை கோரி தர்ணா போராட்டத்தில் இன்று ஈடுபட்டார். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசாரின், அவரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது.