திருவள்ளூர் அருகே காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு ஏமாற்றிய காதலனால் விரக்தி அடைந்த இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தலைமறைவான காதலனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நல்லாட்டூர் காலணியைச் சேர்ந்த மணிமேகலை என்னும் இளம் பெண், வசித்து வந்துள்ளார். தலித் இனத்தைச் சேர்ந்த அந்த இளம் பெண், அந்த பகுதியில் உள்ள மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பல பகுதிகளுக்கும் காதலர்களாக ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் இந்த காதல் உல்லாச வாழ்க்கையில், மணிமேகலை கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து, தனது காதலன் ராஜ்குமாரிடம், “உடனடியாக என்னைத் திருமணம் செய்துகொள்” என்று, மணிமேகலை வற்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல், ராஜ்குமார் தவிர்த்து வந்துள்ளார். மணிமேகலை எவ்வளவோ போராடிப் பார்த்தும், காதலன் ராஜ்குமார் மனசை மாற்ற முடியவில்லை.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதைத் தெரிந்து கடும் அதிர்ச்சியடைந்த மணிமேகலை, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாகக் காவல் உதவி ஆய்வாளர் சுதாகர், அந்த பெண்ணை கொச்சைப்படுத்தி விரட்டி அடித்ததாக, தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.

இதனையடுத்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, காதலனால் பாதிக்கப்பட்ட மணிமேகலையை, காவல் துறையினர் தான் கொச்சைப்படுத்தி தற்கொலைக்குத் தூண்டியதாகத் தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. 

போராட்டத்தைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், அதிரடியாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அந்த உத்தரவின் பெயரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி, அந்த பெண்ணை உயிரிழந்தது தொடர்பாக அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது, ராஜ்குமார் தலைமறைவானதாகக் கூறப்பட்டது. அதன் பிறகு, அந்த பெண்ணை காதலித்து ஏமாற்றிய ராஜ்குமார் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

இதனையடுத்து, ராஜ்குமாரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் காவல் துறையினர் மீதும், தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு ஏமாற்றிய காதலனால் விரக்தி அடைந்த இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தலைமறைவான காதலனை போலீசார் தற்போது கைது செய்துள்ள சம்பவம், திருவள்ளூர் அருகே இரு தரப்பு சமூகத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.