தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், தனிநபர் தகவல் திருட்டு ஆகியவற்றால் அமெரிக்காவில் டிக் டாக் செயலியைத் தடை செய்வோம் என்று அதிபர் ட்ரம்ப் இன்று காலை அறிவித்துள்ளார்.

அதேசமயம், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் செயலியான டிக் டாக்கை, அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதத்தில், இந்திய அரசு தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்திருந்தது. மேலும் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமென்று கூறி, அங்கும் சில செயலிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. தொடர்ச்சியாக அரசு சார்பில் செயலிகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டது குறித்து, பலரும் விமர்சனங்கள் வைத்திருந்தனர்.

இதுபற்றி நிகழ்ச்சியொன்றில் பேசிய இந்திய அமைச்சர், ``இந்தியர்களின் தரவுகளை வெளிநாட்டினர் திருட அனுமதிக்க முடியாது என்றும், அரசு அதன் இறையாண்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது" என்று கூறியிருந்தார். நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவால் ஆராயப்பட்டு, தரவுகள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது என்று கூறியிருந்தார்.

சீன செயலிகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது அமெரிக்காதான்.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பியோ, இதை தனது பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். தங்களின் அதிகாரிகளோடு கலந்தாலோசித்த பின், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த கருத்தைத் தெரிவிப்பார் எனக்கூறியிருக்கிறார் மைக்.
 
ட்ரம்ப், கொரோனா வைரஸ் பரவுதல் விஷயத்தில், ஏற்கெனவே சீனா மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தது, அனைவரும் அறிந்த விஷயம். சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் சேர்ந்துதான் கொரோனா பற்றிய விவரங்களை மறைத்துவிட்டதாகவும், அதனால்தான் இன்று அமெரிக்கா இவ்வளவு மோசமான பாதிப்புகளை சந்திப்பதாகவும் கூறியிருந்தார் ட்ரம்ப். இதை அடிப்படையாக சொல்லி, அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்துக்கு தரும் நிதியையே நிறுத்தியவர் ட்ரம்ப். அந்த அளவுக்கு சீனாவுடன் முரண்பட்டிருக்கும் ட்ரம்ப், இந்த செயலிகள் விஷயத்திலும் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக்கூடும் என கணிக்கிறார்கள் சிலர்.

செயலிகள் வழியாக இப்படி நாடுகளும் நாடுகளும் மோதிக் கொள்வது, சற்றே வேடிக்கையாக தெரிந்தாலும், இந்த மாதிரியான நடவடிக்கைகள் யாவும் எந்தவொரு நாட்டையும் பாதிக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை. அனைத்துமே தனியார் நிறுவனங்களையே பாதிக்கும் என்பதுதான் நிதர்சனம்

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், மக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கும் அச்சறுத்தல் இருப்பதாகக் கூறி குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் பலர் டிக் டாக் செயலியைத் தடை செய்ய வலியுறுத்தினர், அதிபர் ட்ரம்ப்புக்கும் கடிதம் எழுதினர்.

இந்நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம், டிக் டாக் செயலிக்குத் தடைவிதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அதிபர் ட்ரம்ப் பதில் அளிக்கையில், “ஆம், டிக் டாக் செயலிக்குத் தடைவிதிக்கப் போகிறோம். மற்ற சில விஷயங்களையும் செய்ய இருக்கிறோம். இரு வாய்ப்புகள் உள்ளன. நிறைய விஷயங்கள் நடக்க வேண்டியுள்ளன. என்ன நடக்கிறது எனப் பார்க்கலாம்” எனத் தெரிவி்த்தார்.

இதற்கிடையே ப்ளூம்பெர்க் நியூஸ், மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு வெளியிட்ட செய்தியில், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் அந்த நாளேடுகள் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

டிக் டாக் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில், “ஊகச் செய்திகளுக்கும், வதந்திகளுக்கும் நாங்கள் பதில் அளிக்கப்போவதில்லை. டிக் டாக் செயலியை நீண்டகாலத்துக்கு வெற்றிகரமாகக் கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட டிக் டாக் செயலி இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது
 

- ஜெ.நிவேதா