நடிகை குஷ்பூ vs கே.எஸ். அழகிரி இடையேயான வார்த்தை போர் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. 

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு வரவேற்புத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் டிவிட்டரில் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர்.

அதாவது, மத்திய அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட புதிய அறிவிப்பில், “புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்தது. என்னென்ன மொழிகள் என்பதை மாநில அரசுகள் தான் முடிவு செய்யும்” என்றும், குறிப்பிட்டு இருந்தது. 

“பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் ஒரு விருப்ப மொழியாக இருக்கும் என்றும், சமஸ்கிருதம் மட்டும் இல்லாமல் இதர தொன்மை மொழிகளும் விருப்ப மொழிகளாக இருக்கும்” என்றும், தெரிவித்திருந்தது.

“இந்திய மொழிகளுக்கான இலக்கியம், அறிவியல் பூர்வ வார்த்தைகளைக் கண்டறியக் கவனம் செலுத்தப்படும் என்றும், மாநில மொழிகளுக்கு இணையாக புதிய கல்வி கொள்கையில் பாடத் திட்டங்கள் இருக்கும்” என்றும் கூறியிருந்தது. 

அத்துடன், “மாநில மொழிகளில் கல்வி கற்க இணையதளம் மூலம் மாணவர்களுக்குப் பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும், நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும்” என்றும், மத்திய அரசு அறிவித்திருந்தது.

இப்படி மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்ளைக்கு எதிராக தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர். 

அத்துடன், இதுவரை இருந்து வந்த இருமொழிக் கொள்கைக்குப் பதிலாகப் புதிதாக அமைய உள்ள மும்மொழிக் கல்விக் கொள்ளைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழல் நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ, புதிய கல்வி கொள்கையை வரவேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களே, டிவிட்டர் பக்கத்தில் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். 

குறிப்பாக, “நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சியிலிருந்து, பாஜவில் விரைவில் இணைய உள்ளார்” என்றும், பதில் அளித்திருந்தார். இதற்கு பதில் அளித்த அவர், “லூசா நீங்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது டிவிட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியில் கருத்துச் சுதந்திரம் உண்டு என்றும். கட்சியின் அமைப்புக்குள் பேசினால், வரவேற்பு உண்டு என்றும், குறிப்பிட்டிருந்தார்.

“ஆனால், வெளியில் பேசினால் அதன் பெயர் முதிர்ச்சியின்மை” என்றும், சுட்டிக்காட்டினார். 

“இப்படிப்பட்ட ஒழுக்கமின்மை விரக்தியிலிருந்து வருகின்றது, இதனைக் குணப்படுத்த யோகாவே சிறந்த மருந்து” என்றும், தனது கண்டனத்தை அவர் பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த நடிகை குஷ்பூ, “கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து தனது கருத்து மாறுபடுவதால், ராகுல் காந்தியிடம் மன்னிப்புக் கேட்பதாகவும், தான் தலையை ஆட்டும் ரோபோவாகவோ, கைப்பாவையாகவோ இருப்பதை விட உண்மையாய் பேசுகிறேன்” என்றும், கே.எஸ்.அழகிரிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அத்துடன், “தன் ஜனநாயகத்தை முழுமையாக நம்புவதால், கருத்து வேறுபாடு நல்லது” என்றும், நடிகை குஷ்பூ விளக்கம் அளித்திருந்தார். இதனையடுத்து, நடிகை குஷ்பூவின் டிவிட்டை, பாஜகவினர் பலரும் ரீடிவிட் செய்து வருகின்றனர். இதனால், நடிகை குஷ்பூ - கே.எஸ்.அழகிரி இடையேயான வார்த்தைப் போர் இணையத்தில் வைரலாகி வருகிறது.