கடலூர் அருகே சிறார் ஆபாசப் படம் பார்த்துப் பரப்பிய இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஒட்டு மொத்த உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் சிறுவர் - சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலை அளிக்கிறது.

சிறார்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்கும் விதமாகத் தமிழகக் காவல்துறை கடந்த சில மாதங்களாகவே பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், சிறார் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் மற்றும் பரப்புவார்கள் தொடர்பான விபரங்களை போலீசார் சேகரித்து வந்தனர். மேலும், அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகச் சிறார் ஆபாசப் படம் பார்த்துப் பரப்பியதாகத் தமிழகத்தில் முதன் முதலாகத் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது
செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் கேசன் சாவடி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் 26 வயதான இளவரசன் என்ற இளைஞர், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது பார்க்கும் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

அப்போது, ஓய்வு நேரங்களில் இளவரசன் இணையதளங்களில் சிறுவர் சிறுமிகளை உட்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப் படத்தைப் பார்த்தும், அதனைப் பதிவிறக்கம் செய்தும் வந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த ஆபாசப் படத்தை அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் இளவரசன் பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனை, தமிழக தேசிய குழந்தைகள் பாலியல் தடுப்பு மைய அலுவலர்கள் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து, இளவரசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை குழந்தைகள் நல அமைப்புக்கு உத்தரவிட்டனர். 

அதன் அடிப்படையில், கடலூர் சைபர் கிரைம் காவல் துணை ஆய்வாளர் சுதாகர் தலைமையிலான காவல் துறையினர், விரைந்து சென்று இளவரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

இதனையடுத்து, இளவரசனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இளவரசன் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து, அதில் வேறு எதாவது ஆபாசப் படம் இருக்கிறதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், இளவரசனிடம் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் இருக்கிறதா என்றும், இந்த ஆபாசப் படத்தை அவர் தனிப்பட்ட முறையில் யாருக்கெல்லாம் பரப்பினார் என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கடலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, குழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் மற்றும் பரப்புவது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்று போலீசார் தரப்பில் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையிலும், சிலர் இதுபோன்று பரப்பி வருவதும் கவலை அளிக்கச் செய்கிறது குறிப்பிடத்தக்கது.