தேனி அருகே 12 அடி ஆழமான குழிக்குள் 9 நாட்கள் தவம் இருக்கப்போவதாக கூறி, சாமியார் ஒருவர் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்து உள்ள மொட்டனூத்து ஊராட்சியில் உள்ள நாகுலகவுண்டன் பட்டியில் அமைந்து உள்ள தனியார் தோட்டத்தில் சாமியார் ஒருவர் பூமிக்கு அடியில் 9 நாட்கள் தொடர்ந்து தவம் இருக்கப் போவதாக கூறி, 12 அடி ஆழக் குழிக்குள் இறங்கி அமர்ந்து பூஜை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அந்த சாமியார் ஜீவசமாதி அடையப் போவதாக அந்த பகுதியில் பரபரப்பு கிளம்பியது. 

அதாவது, ஆண்டிபட்டி அடுத்து உள்ள மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்கிற சொக்கநாதர் என்பவர், தனது 13 வயதிலேயே ஊரைவிட்டு காசிக்கு சென்று அங்கு தீட்சை பெற்று அகோரி முனிவராக மாறியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு தனது சொந்த ஊரான மொட்டனூத்துக்கு அவர் வந்து உள்ளார். அங்கு, சிவபெருமானின் உத்தரவின் பேரில் பூமி வேள்வி பூஜை நடத்த, 12 அடி ஆழ குழிக்குள் இறங்க போவதாக அவர் கூறியிருக்கிறார். 

அத்துடன், குழியின் மேலே சிமெண்ட் சிலாப்புகள் வைத்து மூடி விடும்படியும் அந்த சாமியார் கூறியிருக்கிறார். அதன் படி, அந்த சாமியார் குறிப்பிட்ட அந்த குழிக்குள் இறங்கி உள்ளார். அந்த சாமியார் குழிக்குள் இறங்கியதும், அவர் ஜீவ சமாதி அடைய போவதாக அந்த ஊர் முழுவதும் செய்தி பரவியது. இதனால், அந்த அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாது, பக்கத்து பக்கத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால், அந்த பகுதியில் அளவுக்கு அதிகமாகக் கூட்டம் கூடியது.

மேலும், இது தொடர்பான தகவல் அங்குள்ள ராஜதானி போலீசாருக்கும் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், சாமியார் சொக்கநாதரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, சாமியார் சொக்கநாதர் பேசியதைக் கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

“நான் கடந்த 24 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் வாழ்ந்து வருகிறேன். நீர் கூட அருந்துவது கிடையாது. இப்படியே தான் நான் 24 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.

குறிப்பாக, “இந்த உலக நலனுக்காகத் தான், இந்த வேள்வியை நான் நடத்த உள்ளேன். நான் ஜீவ சமாதி எல்லாம் அடைய வில்லை” என்று, அந்த சாமியார் கூறியிருக்கிறார். 

ஆனால், இவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த போலீசார், “இதற்கு அனுமதி இல்லை” என்று, கூறியுள்ளனர். இதனையடுத்து. அவர் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அந்த குழிக்குள் இருந்து, மேலே ஏறி வந்தார். அப்போது, சாமியார் அங்கு பார்த்த போது, அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தனர். இதன் காரணமாக, அந்த சாமியார் மீண்டும் குழிக்குள் இறங்கி விட்டால் என்ன செய்வது என்று சந்தேகப்பட்ட போலீசார், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.