“திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடப்பதாக” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகம் எனும் மிகப்பெரும் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பிலே உங்களால் உங்களுக்காக அமரவைக்கப்பட்டிருந்தாலும், நான் எப்போதும் உங்களில் ஒருவன்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில், எல்லாவற்றையும் மூடிமறைத்து, மக்களுக்கு மட்டுமின்றி முன்கள வீரர்களான மருத்துவத்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கி - கொரோனா காலத்திலும் கொள்ளை அடிப்பதையே குறியாகக் கொண்ட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

“சீனாவைவிடச் சென்னையில் நோய்த் தொற்று அதிகம் எனப் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தினாலும், தன்னைச் சுற்றியுள்ள அமைச்சர்களுக்கே கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டாலும் முதலமைச்சர் பழனிசாமி, 'தமிழ்நாட்டில் சமூகப் பரவல் இல்லை. கொரோனா விரைவில் ஒழிந்துவிடும்' என்பதை மட்டுமே 

'கீறல் விழுந்த கிராம்போன் ரெக்கார்டு' போல, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதுடன், உயிரிழப்பும் ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு என்கிற எண்ணிக்கைக்கு வந்துவிட்டது. நோய்த்தொற்றால் மக்களிடம் அச்ச உணர்வு அதிகரித்து, ஊரடங்கால் அவர்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார்.

“ஜனநாயக அறப்போர்க் களத்தில் மக்கள் நலன் காப்பதற்காக மட்டுமின்றி, ஜனநாயகத்தையே காக்க வேண்டிய வகையில் நாம் ஆற்றவேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அன்றாடம் ஒவ்வொன்றாகப் பறிக்க முயற்சிக்கும் மத்திய அரசு, அந்த உரிமைகள் குறித்து உணர்வேதும் இன்றி, அடிமைத்தனத்தாலேயே ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் மாநில அரசு என இருபுறத் தாக்குதலில் தவிக்கும் நம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை ஒருங்கிணைத்து, உரிமைப் போரைத் தொடர்ந்திட வேண்டிய உயரிய கடமை கழகத்திற்கு இருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

“ தி.மு.கழகத்தின் செல்வாக்கு, மக்களுக்காக அது சந்திக்கின்ற களங்கள், மக்கள் அதன் மீது வைத்திருக்கிற நம்பிக்கை இவையனைத்தும் நாளுக்கு நாள் பெருகி வருவதை ஆட்சியாளர்கள் அறிவார்கள். உளவுத்துறையினர் அதற்காகத்தேனே இருக்கிறார்கள்! ஜனநாயகத்தில் மக்களின் நம்பிக்கையை ஓர் இயக்கம் பெறுவதும், அதனைத் தக்க வைத்துக்கொள்வதும் சாதாரணமானதல்ல. இயக்கத்தின் கொள்கை, தலைமை, நோக்கம், செயல்பாடு, வழிமுறை என அனைத்தும் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்போதுதான் மக்களின் நம்பிக்கையும் உறுதியாக இருக்கும். தி.மு.கழகம் அத்தகைய வலிமையோடு இருப்பதால், அதனைத் தகர்ப்பதற்கு எத்தகைய திசை திருப்பல்களைச் செய்யலாம் எனத் திட்டமிடுகிற அவர்கள், நம் அரசியல் எதிரிகள் மட்டுமல்ல; நம் பண்பாட்டின் நிரந்தரப் பகைவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி, கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி, இல்லாத காரணங்களை முன்வைத்து, பொல்லாத பழிகளைச் சுமத்தி நம்மை வீழ்த்திடலாம் என பகல் கனவு காண்கிறார்கள்” என்றும், மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

“இன்று - நேற்றல்ல; நூற்றாண்டு கடந்து வீறு நடைபோடும் திராவிட இயக்கம் தனது தொடக்கக் காலத்திலிருந்தே இத்தகையச் சதிகளை முறியடித்து வென்றிருக்கிறது. தி.மு.கழகம் எனும் அரசியல் பேரியக்கம் எத்தனையோ பழிகளை - சதிகளை - அவதூறுகளை எதிர்கொண்டு தகர்த்து தவிடுபொடியாக்கி தனது இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் முன்வைத்த சமூகநீதி - சுயமரியாதைக் கொள்கையைத் தேர்தல் ஜனநாயக அரசியல் வழியில் அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்துவதே பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடாகும். இதில் எந்த மதத்தின் மீதும் தி.மு.கழகத்திற்கு வெறுப்பு கிடையாது. பல மதத்தினரும் திமுகழகத்தில் அங்கம் வகிக்கிறார்கள், தம் மதம் - சாதி மறந்து!

யாருக்கும் சாதிப் பகை வளர்த்திடும் சகுனித்தனம் கூடாது. எவரது நம்பிக்கையிலும் பழக்கவழக்கங்களிலும் குறுக்கிடுவதில்லை. அவரவர் உரிமைகள் நிலைநாட்டப்படும் என அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் குரல் உயர்த்தி - ஆதிக்க சக்திகளுக்கு எதிரான சமரசமற்ற போராட்டம்தான் இந்தப் பேரியக்கத்தின் இலட்சியப் பாதை. ஆதிக்கம் என்பது பல நிலைகளைக் கொண்டது. அத்தனை நிலைகளுக்குள்ளும் ஊடறுத்து, ஒடுக்கப்படுகிற - அடக்கப்படுகிற - ஓரங்கட்டப்படுகிற மக்களின் பக்கம் நின்று அறப்போராட்டங்களை நடத்தி, ஆட்சி செய்கிற வாய்ப்பு அமைந்தபோது சட்டதிட்டங்களை வகுத்து உரிமைகளை மீட்டுத் தந்ததே தி.மு.க. வின் வரலாறு” என்றும், அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், “திருவாரூர் கோவில் தேரோட்டம், மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளம் தூர்வாருதல் எனத் தொடங்கி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலின் திருப்பணியிலும் கவனம் செலுத்தி, கவனிப்பாரற்று இருந்த கோவில்களிலும் ஒரு காலப் பூசையேனும் நடந்திட வழிவகுத்தது தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சி. கிராமப்பூசாரிகள் நலனுக்காக வாரியம் அமைக்கப்பட்டது. தமிழ் வழிபாட்டு முறைக்கு முன்னுரிமை தரப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டவன் சன்னதியில் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இப்படி எடுத்துச் சொல்ல எத்தனையோ இருக்கின்ற நிலையில், நம்மை நோக்கி ‘இந்து விரோதிகள்’ என்று விமர்சனத்தை வைத்து, வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என அரதப்பழசான சிந்தனையை புதிய தொழில்நுட்பங்களின் வழியே புத்தம் புதிய காப்பியாக ரிலீஸ் செய்து பார்க்கிறார்கள்” என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

“பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பும் இத்தகைய சதிவலைகளைச் செய்தபடியே, பெரும்பான்மை இந்து மக்களின் எதிர்கால வெளிச்சத்தை இருட்டாக்கிடும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதனால் பாதிக்கப்படும் பெரும்பான்மை இந்து மக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்” என்றும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்துக்கள் - கிறிஸ்தவர்கள் என எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைத்திடப் போராடுகிறது நமது இயக்கம். அதில் உயிர் பறிக்கப்பட்ட இந்துக்களைக் கொச்சைப்படுத்தியவர்கள்தான் நம்மை இந்து விரோதி என்று திசை திருப்பிடப் பார்க்கிறார்கள்” என்றும், மு.க.ஸ்டாலின் கவலைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “எங்கோ - எதுவோ ஒன்று நடந்தாலும் அதனைத் தொடர்புப்படுத்தி தி.மு.கழகத்தின் மீது பழிசுமத்திட சில அரைவேக்காடுகளை ஆள்பிடித்து வைத்திருக்கிறார்கள்” என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.