சாதி வெறியால் கால் மேல் கால் போட்டமைக்காக  ஒருவருக்கு அறுவாள் வெட்டு விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 23 வயதான சுந்தர், தனது வீட்டு வாசலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

crossing legs

அந்த நேரத்தில் அந்த வழியாக மது போதையில் சென்ற வேறு சமூகத்தைச் சேர்ந்த 40 வயதான கண்ணன், ஆதிக்கத் தோரணையில் சுந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாகத் தெரிகிறது. மேலும், சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் தெரிகிறது. 

குறிப்பாக, தன் முன்னால் எப்படி கால் மேல் கால் போட்டு அமரலாம் என்று சொன்னதையோ திரும்பத் திரும்ப சொல்லி சண்டைபோட்டுள்ளார். பதிலுக்கும் சுந்தரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஆத்திரத்தில் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து சுந்தரின் தலையில்  வெட்டியுள்ளார். தொடர்ந்து, அவரை மேலும் தாக்க முற்பட்டுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் பிரித்து விட்டனர்.

இதில், பாதிக்கப்பட்ட சுந்தருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சுந்தர் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாதி வெறியில் தாக்கிய கண்ணன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். 

crossing legs

இதனிடையே,  சாதி வெறியால் கால் மேல் கால் போட்டமைக்காக  ஒருவருக்கு அறுவாள் வெட்டு விழுந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.