தென்காசியில் 2 வது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவன் மீது புகார் அளித்ததால், ஆத்திரமடைந்த அவர் தனது மனைவியை காவல் நிலைய வாசலில் வைத்தே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி பாவூர் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழக்கடை வியாபாரி முருகனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். 

அதேபோல், விருதுநகர் மாவட்டம் திரிச்சுழி பகுதியைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணுக்கு ஏற்கனவே மூர்த்தி என்பவருடன் திருமணம் ஆன நிலையில், இந்த 
தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் என 2 பிள்ளைகள் பிறந்தனர். 

பின் நாட்களில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சித்ரா தன் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார். இந்த பிரிவின் போது, சித்ராவின் மகன் 
அவரது தந்தை மூர்த்தி உடன் சென்ற நிலையில், மகள் மகள் விஜயலட்சுமி தாய் சித்ராவுடன் வந்துவிட்டார். இதனால், மகள் விஜயலட்சுமி உடன் தாய் சித்ரா வசித்து வந்தார்.

அப்போது, சித்ராவும் பழ வியாபாரம் செய்து வந்தார். அந்த நேரத்தில், சித்ராவுக்கும் பழக்கடை வியாபாரி முருகனுக்கும் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவரும் கணவன் - மனைவியாக வாழத் தொடங்கினர்.

அதன் தொடர்ச்சியாக, சித்ராவையும் அவரது மகளையும் அங்குள்ள பாவூர்சத்திரம் அழைத்து வந்து கடந்த 9 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தார். 

இப்படி 2 வது மனைவி சித்ராவுடன், முருகன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், முருகனுக்கு புத்தி தடுமாறி உள்ளது. இதனால், தன்னுடைய 2 மனைவி சித்ராவின் மகள் விஜயலட்சுமியை அவ்வப்போது முருகன் பாலியல் சில்மிஷங்கள் தந்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்குப் பிறகு, அந்த பாலியல் சில்மிஷங்கள் எல்லை மீறிப் போகவே, இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முடிவு எடுத்த அவர், தந்தையின் இந்த செயல்பாடு குறித்து தனது தாயார் சித்ராவிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சித்ரா, முதலில் கணவனை அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனால், அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த மனைவி சித்ரா, அங்குள்ள ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார், முருகன் - சித்ரா ஆகிய இரு தரப்பையும் அழைத்து நேரில் விசாரித்து உள்ளனர். இதனையடுத்து, இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி விட்டு, வெளியே வரும்போது அந்த காவல் நிலைய வாசலிலேயே முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சித்ராவை கண்மூடித்தனமாகத் தாக்கி உள்ளார். 

இதில், சித்ராவின் மார்பு மற்றும் வயிறு உள்ளிட்ட பல பகுதிகள் குத்தி குத்து விழுந்துள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் சித்ரா கீழே சரிந்துள்ளார். இதனையடுத்து, முருகன் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசார், உடனடியாக சித்ராவை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சித்ரா உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய முருகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.