மத்திய அரசின் இந்தித் திணிப்பு மற்றும் தமிழர் நலன் புறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில் தமிழ்மொழி புறக்கணிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 7) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

``இந்தியாவின் பாரம்பரியமான பன்முகத்தன்மையைப் பாழ்படுத்தி, ஒருமைப்பாட்டினை உருக்குலைப்பது ஒன்றையே கொள்கையாகக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்தியக் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்ய அமைத்த 16 பேர் குழுவில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னகத்தினர் - சிறுபான்மையினர் - பட்டியலினத்தவரைப் புறக்கணித்தது, கற்றறிந்த சான்றோரின்  கடும் கண்டனத்திற்குள்ளானது.

தற்போது மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில், தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான அறிவிக்கையில், இந்தியாவின் மிக மூத்த மொழியாம் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது, கண்டனத்திற்குரிய வஞ்சகச் செயலாகும். பட்டயப்படிப்பிற்கான கல்வித்தகுதியாக சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில்; இந்திய நாட்டின் தொல்லியல் சான்றுகளில் அறுபது சதவிகிதத்திற்கும் மேலான சான்றுகளைக் கொண்டு விளங்கும்  தமிழைத் திட்டமிட்டுத் தவிர்த்திருப்பது,  தமிழ் மொழியின் மீதான பண்பாட்டுப் படையெடுப்பாகும். இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டை ஒழித்திட முனையும் இந்தப் பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து கண்டனக் குரல் எழுப்புவோம்!

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மண்ணின் மைந்தர்களுக்கான வேலைவாய்ப்புகள் அருகி வரும் நிலையில், ரயில்வே மற்றும் மின்வாரியப் பணிகள் - ஊட்டி ஆயுதத் தொழிற்சாலை பணியிடத்துக்கான தேர்வு உள்ளிட்டவற்றில், தமிழ் தெரியாத வடமாநிலத்தவர் அதிகமாக  நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் அதிருப்திக் குரலை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தி மொழியில் கூடத் தேர்ச்சி பெற இயலாத வடமாநிலத்தவர், மின்வாரியம் தொடர்பான தேர்வுகளில் தமிழ்மொழியில் அதிக மதிப்பெண்கள் எடுத்தது எப்படி என்ற நீதிபதிகளின் கேள்வி, எதிர்காலத் தலைமுறையின் நலன் காக்கும் வகையிலானது. மத்திய அரசின் இந்தித் திணிப்பு மற்றும் தமிழர் நலன் புறக்கணிப்புக்குத் துணை போகும் அடிமை அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களையும்  அம்பலப்படுத்துவோம்!"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.