அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் அறிவித்தார்.

கடந்த செப். 28-ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பெரும் விவாதமாகவே வெடித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் நேரடியாகவே காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட, முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு அக்.7-ம் தேதி (இன்று) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்நிலையில், இன்று (அக். 7) முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்காக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதலே ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கு குவியத்தொடங்கினர். இருவருக்கும் ஆதரவான முழக்கங்களை அவரது ஆதரவாளர்கள் எழுப்பினர்.

இதையடுத்து, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும், முதல்வர் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வந்து, எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என தொண்டர்கள் மத்தியில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அவைத்தலைவர் மதுசூதனனுக்கு உடல்நலம் சரியில்லாததால் வரவில்லை எனவும், அவர் சம்மதத்துடனேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். அப்போது, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாகவே  முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.  குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும்  மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால், ஆளும் அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது. 

அப்படியான சூழலில்தான் இன்று அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். 

``மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது" என்று துணைமுதல்வர் ஒபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது, ``அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளில் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது" என்று தெரிவித்தார்.

இன்று காலை அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியின் பெயரை, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். இந்த அறிவிக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் சென்னை மற்றும் சேலத்தில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தற்போதுதான், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.