“தமிழ்நாட்டு வேலைகளை இந்திக்காரர்கள் பறித்துக் கொள்ளத் தமிழ்நாடு அரசே துணை போகிறதா?” என்று, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், தமிழ் அமைப்புகளும் வரிசைக்கட்டி கேள்வி எழுப்பி உள்ளன.

தமிழகத்தில் தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும், இந்திய அரசுத் துறைகளின் பணிகளிலும் மண்ணின் மக்களாகிய தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதோடு, இந்திக்காரர்கள் அதிகமாக பணியமர்த்தப்பட்டு வருவதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், அருணபாரதி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அது உண்மை என்பதை மெய்பிக்கும் வகையில், “தமிழ்நாட்டு வேலைகளை இந்திக்காரர்கள் பறித்துக் கொள்ளத் தமிழ்நாடு அரசே துணை போகிறதா?” என்று, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்து உள்ளனர். அதன்படி, “மற்ற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கான சட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் இருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அது இல்லை?” என்றும், நீதிபதிகள் இருவரும் தமிழக அரசை கேள்வி கேட்டு உள்ளனர்.

“நீதிபதிகள் தற்போது எழுப்பி உள்ள கேள்வியைத் தான், தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்தே தமிழக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கிறது” என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், தற்போது சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “கடந்த 2018 பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கத்தில் இதற்காகவே “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே” என்ற தலைப்பில் பெரும் மாநாடு ஒன்றை நடத்தி, அதில் தீர்மானம் நிறைவேற்றி, மற்ற மாநிலங்களில் உள்ள மண்ணின் மக்கள் வேலை உரிமைக்கான சட்டங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டோம்” என்றும், மணியரசன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிறைவேற்றப்பட்ட “தீர்மானத்தையும், அந்த நூலையும் கடந்த 2018 பிப்ரவரி மாதமே தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து கொடுத்தோம் என்றும், ஆனால் தமிழ்நாடு அரசு தமிழர்களின் வேலை வாய்ப்புப் பறிபோவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அயல் மாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது” என்றும், மணியரசன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில் தான், “தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் என்ற இளைஞர், ஊட்டியிலுள்ள மத்திய அரசின் ஆயுதத் தொழிற்சாலையில் கெமிக்கல் பிராசசிங் பணிக்கு நடந்த தேர்வில் கலந்து கொண்டு, 40 மதிப்பெண் வாங்கியதாகவும், ஆனால் அவருக்கு வேலை கொடுக்காமல், அவரை விட மிகக் குறைவாக மதிப்பெண் பெற்ற வெளி மாநிலத்தவர்கள் 6 பேருக்கு வேலை கொடுத்ததாகவும்” கூறி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் வழக்குத் தொடுத்திருந்தார்” என்றும், மணியரசன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்பு, “தகுதியுள்ள சரவணக்குமாருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும், அந்த தொழிற்சாலையிலுள்ள காலிப்பணியிடங்கள் 12 ல், ஒரு பணியிடத்தை இவருக்கு வழங்க வேண்டு என்றும், நீதிபதிகள் தீர்ப்பு அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைத் தொடர்ந்து, பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே,  “தமிழ் - தமிழர் நலன் புறக்கணிப்பைத் தொடர்ந்து வரும் இந்திய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனத்திற்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்” என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து, “செம்மொழி தமிழுக்கு உரிய இடமளிக்காமல் பிரதமர் மோடி, தமிழின் சிறப்புகளையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசி வெற்று விளம்பரத்தில் ஈடுபட்ட்டு வருவதாக” மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.