அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று நடைபெறவிருக்கிறது. இதையொட்டி ட்ரம்ப் பிரச்சாரப் பணிகளில் பிசியாக இருந்தார். மேலும், அதிபர் தேர்தலுக்கான நேரடி விவாதம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. அப்படியான சூழலில்தான், ட்ரம்பிற்கு மிக நெருக்கமான உதவியாளரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று முதலில் உறுதிசெய்யப்பட்டது. இவரும் அதிபர் ட்ரம்பும் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியன்று விமானத்தில் ஒன்றாக பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவியாளருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, ட்ரம்ப் உடனடியாக தான் தனித்திருக்க தயாராவதாக அறிவித்தார். தொடர்ந்து, சில மணி நேரத்தில் அதிபர் ட்ரம்பும், அவரது மனைவில் மெலனியாவும் கொரோனா பரிசோதனை செய்தனர்.
 
அப்போதுதான் அவருக்கும், அவர் மனைவி மெலனிவாக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று ஃப்ளோரிடாவில் நடைபெறவிருந்த பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு கொரோனா உறுதியானது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பணிகளை உடனடியாக தொடங்க இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இதில் இருந்து மீளுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல தன் உதவியாளருக்கு தொற்று உறுதியானது பற்றி குறிப்பிடும்போது,``சிறிய இடைவெளி ஓய்வு கூட எடுத்துக்கொள்ளாமல் அயராமல் உழைத்து வந்த தனது ஆலோசகர் ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று (அக்டோபர் 6) வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இதன் மூலம், அவர் விரைவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் மீண்டும் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

மருத்துவமனையிலிருந்து கிளம்பிய ட்ரம்ப், அமெரிக்க அதிபருக்கான அதிகாரபூர்வ ஹெலிகாப்டரான மெரைன் ஒன்னில் வெள்ளை மாளிகையை சில நிமிடங்களில் சென்றடைந்தார். முன்னதாக, தனது உடல்நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ட்ரம்ப், "நான் உண்மையிலேயே நன்றாக இருக்கிறேன். கொரோனாவுக்கு பயப்படாதீர்கள். அதை உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார் ட்ரம்ப்

இந்நிலையில் ட்ரம்ப்புக்கு ஒருவேளை கொரோனா தொற்று இருந்தால் அவருடன் விவாதம் நடைபெறாது என்று தான் நினைப்பதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களுடன் ஜோ பிடன் பேசும்போது, “ட்ரம்ப்பின் தற்போதைய உடல்நலம் குறித்த தகவல் என்னிடம் இல்லை. ட்ரம்ப்புக்கு கொரோனா தொற்று இருந்தால் இரண்டாவது விவாதம் நடைபெறாது என்று நினைக்கிறேன். பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. நான் தொடர்ந்து மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி நடந்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தான் நலமாக இருப்பதாகவும், விவாதத்துக்குத் தயார் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.