அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் அறிவித்தார். இதேநேரத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யாரென்ற அறிவிப்பும் வெளியானது. 

அந்த அறிவிப்பின்படி, எடப்பாடி பழனிச்சாமிதான் அடுத்த முதல்வர் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- 

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. இன்று பொன்னான நாள். அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் எதிர்பார்த்த அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு மகிழ்ச்சியான ஒருமித்த கருத்து எட்டப்பட்டு நல்ல முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். 

பிரச்சினைகள் வராதா அதில் குளிர்காயலாம் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போடுகின்ற வகையில் ஏகோபித்த உணர்வுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம். எதிரிகள், துரோகிகள் புறமுதுகை காட்டி ஓடும் வகையில் புதிய புறநானூற்றை அதிமுக படைக்கும். 2021-ல் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கடந்த செப். 28-ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பெரும் விவாதமாகவே வெடித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் நேரடியாகவே காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட, முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு அக்.7-ம் தேதி (இன்று) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்நிலையில், இன்று (அக். 7) முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்காக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதலே ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கு குவியத்தொடங்கினர். இருவருக்கும் ஆதரவான முழக்கங்களை அவரது ஆதரவாளர்கள் எழுப்பினர்.

இதையடுத்து, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும், முதல்வர் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வந்து, எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என தொண்டர்கள் மத்தியில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அவைத்தலைவர் மதுசூதனனுக்கு உடல்நலம் சரியில்லாததால் வரவில்லை எனவும், அவர் சம்மதத்துடனேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை இன்று அறிவித்தார். இதன்பின்னர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர்-ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.