சென்னையில் காதலை ஏற்க மறுத்த தோழியை பழிவாங்கும் விதமாக, தோழியின் தாயாரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் ஒருதலை காதலன் பரப்பியதால் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.  

சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண் தொழிலதிபரின் 17 வயது மகள், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

அதேபோல், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவன் ஒருவனும், அந்த சிறுமி படிக்கும் அதே பள்ளியில் படித்து வருகிறார். 
இருவரும் ஒரே பள்ளி என்பதால், அவர்கள் நண்பர்களாகத் தொடக்கத்தில் பழகி வந்துள்ளனர்.

நாளடைவில், இந்த நட்பானது அந்த 17 வயது பள்ளி மாணவனுக்கு காதலாக மாறி உள்ளது. இதன் காரணமாக, அந்த பெண்ணை தோழியாகப் பார்க்காமல், ஒருதலையாக அந்த சிறுவன் காதலித்து வந்துள்ளான்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தால், தன் காதலை அந்த சிறுவன், அந்த மாணவியிடம் கூறி உள்ளான். ஆனால், காதலை ஏற்க மறுத்த அந்த சிறுமி, தன் நண்பனுடனா நட்பைத் துண்டித்து, அவரிடம் பேசுவதையும் நிறுத்தி விட்டார். ஆனால், பதிலுக்கு அந்த சிறுவன் எவ்வளவோ பேச முயன்றும், அந்த சிறுமி அவனைத் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், கோபம் அடைந்த அந்த 17 வயது சிறுவன், அந்த சிறுமி தன் காதலை ஏற்காமல் போனதற்கு, அவரது பணக்கார தயார் தான் காரணம் என்று, அவன் நினைத்துள்ளான். இதனால், தன் தோழியின் தாயாரைப் பழிவாங்க அந்த சிறுவன் முடிவு செய்தான்.

அதன்படி, அந்த 40 வயதான பெண் தொழிலதிபரைப் பழி வாங்கும் விதமாக, அவரது புகைப்படத்தை வைத்து, அவரது பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கைத் தொடங்கி, அந்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்துள்ளார்.

குறிப்பாக, அந்த பதிவில், “நிர்வாண வீடியோ கால் அழைப்புக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண் என்று குறிப்பிட்டு, அந்த பெண் தொழிலதிபரின் எண்ணையும்” பகிர்ந்துள்ளார். 

இதன் தொடர்ச்சியாக, பெண் தொழிலதிபரின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஆபாச அழைப்புகள் வந்துள்ளன. இதனால், அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த அந்த பெண், சமூக வலைதளத்தில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது, தனது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, சென்னை குமரன் நகர் காவல் நிலையத்தில் பெண் தொழிலதிபர் புகார் அளித்தார். இது தொடர்பாக அடையாறு காவல் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில், இந்த ஒரு காதலும், அதற்குப் பின்னால் இருந்த அந்த 17 வயது சிறுவனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனால், அந்த பள்ளி மாணவன் மீது தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, சமூக வலைத்தளத்தில் பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல், மற்றும் பொது இடத்தில் பெண்ணின் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையிலான செயல்பாடு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சென்னையில் உள்ள அரசு கூர் நோக்கு இல்லத்திற்கு ஒப்படைத்தனர்.