சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கலகலப்பு. இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கருணாகரன். முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். படங்களுக்கு வருவதற்கு முன்னரே குறும்படங்களில் நடித்து வந்தார் கருணாகரன். இவர் நடித்த பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, லிங்கா போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் கருணாகரன். இந்த ஷூட்டிங்கின் போது நடிகர் கருணாகரனுக்கு காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதை அவர் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அதன் பாதிப்பு அதிகரித்ததால், மருத்துவர்களிடம் ஆலோசித்து, சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து அவரை சில வார காலத்துக்கு ஓய்வெடுக்கச் சொல்லியுள்ளனர் மருத்துவர்கள். கருணாகரன் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பதிவு செய்து வந்தனர். சில இணையவாசிகள் அவருக்காக பிரார்த்தனை செய்தும் வந்தனர். 

இந்நிலையில் கருணாகரனை நடிகர் விஷ்ணு விஷால் நேரில் சென்று சந்தித்திருக்கிறார். அப்போது அவர் படுத்திருக்கும் போது எடுத்த வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விஷ்ணு. என் நண்பர் கருணாகரன் ACL அறுவை சிகிச்சை முடித்து அதில் இருந்து குணமாகி வருகிறார். அவர் இதை என்ஜாய் செய்கிறார் போல தெரிகிறது. 

அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது? அவர் உண்மையை மறைகிறார் என நினைக்கிறேன். இந்த லாக் டவுனில் காயம் ஏற்பட அவரது மனைவி காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயம் என சொல்கிறார் என விஷ்ணு விஷால் நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இன்று நேற்று நாளை படத்தில் விஷ்ணுவின் நண்பனாக நடித்திருப்பார் கருணாகரன். 

கருணாகரன் கைவசம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான், யோகி பாபுவுடன் பன்னி குட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கருணாகரன் நடிப்பில் ட்ரிப் திரைப்படம் உருவாகியுள்ளது. த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமான ட்ரிப் படத்தில் யோகிபாபு மற்றும் சுனைனாவுடன் சேர்ந்து நடிக்கிறார் கருணாகரன்.