தமிழகத்தில் இபாஸ் நடைமுறை தொடர்பான சர்ச்சைகள், ஒவ்வொரு நாளும் வலர்ந்துக் கொண்டே இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும், ``தமிழகத்தில் இபாஸ் நடைமுறை வேண்டாம்" எனக்கூறி அரசுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.  நேற்றைய தினம்கூட, திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இதுபற்றி பேசியிருந்தார்.

அவர் பேசும்போது, ``திமுக தேர்தல் பணிகளை தொடங்கக் கூடாது என்பதற்காகத்தான் இ-பாஸ் முறையை தமிழக அரசு நீட்டித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களை எங்களால் சந்திக்க இயலவில்லை. அதனால்தான் இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கூடிய விரைவில் இதுதொடர்பாக அறிவிப்புவரும் என எதிர்பார்க்கிறோம்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து சர்ச்சைக்கும் முடிவு தெரிவிக்கும் வகையில் பேசியிருக்கிறார். முதல்வர் கூறும்போது, ``தமிழகத்தில் இபாஸ் நடைமுறை கட்டாயம்" எனக்கூறியுள்ளார். இதன் பின்னணியை கூறும்போது, ``கொரோனா பரவல் கட்டுப்படுத்தலில் முக்கியத்தேவையாக இருப்பது ட்ரேசிங்தான். இபாஸ், அதற்கு உதவும். ஆகவே இது அவசியம்" என்று கூறியுள்ளார்.

மேலும், கடலூரில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசித்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
 
``* தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

* தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது.

* உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம்.

* கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன.

* கடலூரில் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன.

* கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் 9,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

* கடலூரில் மட்டும் 3 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,114 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

* கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

* மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன்.

* யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை இ-பாஸ் முறை இருந்தால்தானே கண்டறிய முடியும்"

என்று அவர் கூறினார். 

உயர்நிதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த ஒரு வழக்கு, இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், ``கொரோனா தொற்று நவம்பர் மாதம் வரை உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உணவு மற்றும் உறைவிடத்திற்கான செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்து வருவதாகவும், அவர்களுக்கு இ–பாஸ் வழங்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம், மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே இ– பாஸ் வழங்கப்படுவதால், சென்னையை விட்டு வெளியேற விரும்பும் மக்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இ பாஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தேவைப்பட்டால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் மனுதாரருக்கு அனுமதி அளித்தும் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.