நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹல், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர்  கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டதில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய ஏழு மாநில முதலமைச்சர்கள் முடிவு செய்துள்ளன. 

இந்நிலையில் பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று திரள வேண்டுமென்றும், அதற்கான குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ‘மக்கள் நாடாளுமன்றம்’ அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பல்வேறு விவசாய சமூக அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த டிஜிட்டல் மக்கள் நாடாளுமன்றத்தில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்களும் கலந்துகொண்ட இந்த மக்கள் நாடாளுமன்றம் ஆகஸ்டு 19 முதல் 26 வரை ஒரு வார காலம் நடைபெற்றது.

250 பேர் பங்கேற்ற இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசும்போது,
 
“இந்திய ஜனநாயகம் மற்றும் குடியரசின் தூண்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. தகவல் மற்றும் உணவுக்கான மக்களின் உரிமை கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டது. அரசாங்கத்திற்கு எதிரான இந்த போரை ஒரு கட்சி அல்லது ஒரு இயக்கம் மட்டும் நடத்த முடியாது. அனைத்து எதிரக்கட்சிகளும், அனைத்து சமூக இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும். எனவே எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கு சவால் விட, எதிராகப் போராட பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டம் உடனடித் தேவையாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் குறைந்த பட்ச செயல் திட்டத்தை வகுக்க மார்க்சிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும்” என்றார் யெச்சூரி.

காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கே.ராஜு, “எதிர்க்கட்சிகள் பொதுவான செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்பதில் யெச்சூரியோடு நான் உடன்படுகிறேன். மேலும் 2019 இல் நடந்த முதல் மக்கள் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார் என்பதை நினைவு கூர்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் பேசும்போது “கொரோனா ஊரடங்கை மத்திய அரசு தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்திய இரும்பு ஆணையம், இந்திய நிலக்கரி நிறுவனம், மற்றும் இந்திய ரயில்வே போன்ற பல்வேறு தேசிய பொதுத்துறை நிறுவனங்களை இந்த கொரோனா காலத்தில் தனியார் மயமாக்கிவிட்டது. நாடாளுமன்றத்தைக் கூட்டாததன் மூலம் இந்த அரசு கேள்விகளிடம் இருந்து தப்பித்து ஓடி ஒளிந்துகொள்ள முயற்சிக்கிறது” என்றார்.

ஆர்.ஜே.டி செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜா கூறுகையில், “வர இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மக்களவை, மாநிலங்களவை என ஒவ்வொரு அவையும் ஒவ்வொரு நாளும் நான்கு மணிநேரம் மட்டுமே இயங்கும் என்பதால் உறுப்பினர்களுக்கு முக்கியமான பிரச்சினைகளை எழுப்புவதற்குக் குறைந்த நேரமே கிடைக்கும்” என்று எச்சரித்தார்.