கொரோனா பாதிப்புக்கான தடுப்பு பணியானது, உலகம் முழுக்க மிகவேகமாக நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து நாடுகளும், தாங்கள்தான் முதலில் தடுப்பூசியைக் கண்டுபிடிக்க வேண்டுமெனப் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. நம் பிரதமர் மோடிகூட, `கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிவதிலும், அதை விநியோகத்திலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும்' எனக்கூறியிருந்தார். 

உலக சுகாதார நிறுவனம், உலகிலேயே ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து ஆய்வுதான் தற்போதைக்கு அனைத்து ஆய்வுகளைவிடவும் முன்னணியில் இருப்பதாகச் சொல்லியிருந்தது.

இப்படியான சூழ்நிலையில், ரஷ்யா தாங்கள் தடுப்பை மருந்தைக் கண்டறிந்துவிட்டதாக அறிவித்துள்ளது. மனிதர்கள் மீதான தங்களின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகக் கூறி, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறது ரஷ்யா. இது உண்மையாகும்பட்சத்தில், உலகிலேயே முதன்முதலாகத் தடுப்பு மருந்து கண்டறிந்திருப்பது, ரஷ்யாவாகத்தான் இருக்கும். நேற்றைய தினம் (ஜூலை 12,2020) வெளியான ஊடக அறிக்கையில், சம்பவப்பட்ட ஆய்வகம் இதைத் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த செசோனோவ் பல்கலைக்கழகம் (Sechenov University)தான், கோவிட் - 19 கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் Translational Medicine and Biotechnology இயக்குனர் வாடிம் தாராசோவ், "செசோனோவ் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி அதில் வெற்றி பெற்று விட்டது,'' எனத் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் பேசியபோது, ``ஜூன் மாதம் 18 ஆம் தேதி இந்த தடுப்பூசி சோதனைகள் யாவும் தொடங்கப்பட்டிருந்தது. அப்போது,18 தன்னார்வலர்களுக்குத் தடுப்பு மருந்து தரப்பட்டது. பின்னர், ஜூன் 23 ம்  தேதி, இரண்டாம் கட்டமாக அடுத்த 20 தன்னார்வலர்களுக்கு மருந்து செலுத்தப்பட்டது. எங்களின் இரு சோதனைகளில் ஈடுபட்டவர்களும், நலமாக இருக்கிறார்கள். ஆகையால் நாங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று கூறியிருக்கிறார்.

கூடுதல் தகவலாக, இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள Gamalei Institute of Epidemiology and Microbiology என்ற நிறுவனம் தயாரித்துள்ளது என்பதையும் அவர் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் உலகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தைச் சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்ற 'முதல் நாடு' என்ற பெருமை ரஷ்யாவுக்குக் கிடைத்துள்ளது. எனினும், இந்த தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் சரிவரத் தெரியவில்லை. 

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகம் முழுவதும் சுமார் 21 தடுப்பூசிகள் தற்போது முக்கியமான சோதனை கட்டத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2021 - ம் ஆண்டு தான், தடுப்பூசிகள் விற்பனைக்கு வரும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது. ஒருவேளை முன்னரே தடுப்பூசி கண்டுபிடித்தாலும் கூட, அதைச் சோதனை செய்து, விற்பனை நிலையத்துக்குக் கொண்டு வர பல மாதம் ஆகும் என உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறியிருந்தார்கள். இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து, ரஷ்யா கண்டுபிடித்திருக்கும் இந்த மருந்தும் விற்பனைக்கு வர பல மாதங்கள் ஆகலாம் என மருத்துவ சந்தையில் கணிக்கப்படுகிறது. 

இதுவொரு பக்கம் இருந்தாலும், இன்னமும் இந்த மருந்தை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம். அவர்கள் அங்கீகரித்த பிறகே, உலகம் முழுவதும் மருந்து விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, ரஷ்யா தனது இந்தக் கண்டுபிடிப்பு பணியை, வெறும் 30 நாள்களுக்குள் முடித்துள்ளதாகக் கூறியிருக்கிறது. இந்தக் கருத்து, அறிவியலாளர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ளது. ஏனெனில், தடுப்பு மருந்தை உறுதிசெய்வதில் பல கட்டங்கள் இருக்கின்றன. குறைந்தது, மூன்று முதல் ஆறு மாதம் வரை ஆகலாம் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படியிருக்கும்போது, இத்தனை தினங்களுக்குள் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழும்புகிறது. `எது எப்படியானாலும், முடிவு உலக சுகாதார நிறுவனத்தின் கைகளில்தான் இருக்கிறது' எனக்கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். 

ரஷ்யாவும், தாங்கள் கண்டறிந்த மருந்தின் பெயரை இன்னமும் கூறாமல் இருப்பதால், மருந்து பற்றி எதுவும் பேச முடியாத நிலையில் இருக்கிறது அறிவியல் உலகம்.


- ஜெ.நிவேதா.