கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பெரும்பாலான தளர்வுகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் சினிமா தியேட்டர்கள் மட்டும் திறக்கப்படாமல் இருந்துவந்தது.

இதனால், பொன்மகள் வந்தாள், க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட ஒருசில திரைப்படங்கள் ஒடிடி என்னும் ஆன்லைன் தளங்கள் மூலமாக வெளியானது. திரைப்படம் சார்ந்த தொழிலாளர்களும் ரசிகர்களும் தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இதனிடையே, கொரோனா ஊரடங்கில் 5வது கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு, அக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்தது.

இந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படவுள்ள தியேட்டர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை இயக்குவதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு இன்று (அக்டோபர் 6) வெளியிட்டுள்ளது. அதன்படி, திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமரவைக்க செய்ய வேண்டும். காலியாக உள்ள இருக்கைகள் குறித்து குறிப்பிட வேண்டும். இதன் மூலம் முறையான சமூக இடைவெளியை பராமரிக்க முடியும்.

திரையிடும் நேரம் ஒன்றாக இருந்தால் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், அதிக எண்ணிக்கையில் டிக்கெட் கவுண்டர்களை திறக்க வேண்டும். பார்வையாளர்கள் அனைவரையும் மாஸ்க் அணிய வலியுறுத்த வேண்டும். திரையரங்குகளில் வாயிலில் சானிடைசர் வைக்க வேண்டும். மேலும், திரையரங்குகள் உள்ளே உணவு மற்றும் நொறுக்குத் தீனி வழங்க தடை செய்யப்படுவதாகவும் ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பார்வையாளர்களின் உடல் வெப்ப நிலையைப் பரிசோதனை செய்யவேண்டும். அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும். ஆன்லைன் மூலமாக டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். இடைவேளையும் போது பார்வையாளர்கள் வெளியே செல்வது போன்ற அவர்களது நடமாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும். பார்வையாளர்களின் தொடர்பு எண்களை வாங்கிவைத்திருக்க வேண்டும். அரங்கில் ஏசி அளவு 24-30 என்ற விகிதத்திலேயே கடைபிடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள மாநிலங்களில் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திரைத்துறைனர் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருக்கும் விவரங்கள் :

* 50 சதவீத இருக்கைகளில் மட்டும் ரசிகர்களை அனுமதித்து தியேட்டர்களை திறக்கலாம்.

* சினிமா தியேட்டர்களில், ஒரு இருக்கை இடைவெளி விட்டு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்

* ஒவ்வொரு காட்சி முடிந்த பின், கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.

* அனைவரும் மாஸ்க் அணிந்தபடி படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்

* தியேட்டர் உள்ளே பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்கு தீனிக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

* ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்ய பார்வையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

* தியேட்டரில் 24 முதல் 30 டிகிரியில் ஏ.சி., அளவை பராமரிக்க வேண்டும்

* ரசிகர்கள் தியேட்டருக்குள் செல்லும் போது சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.

* திரைப்பட இடைவேளையின் போது ரசிகர்கள் இருக்கைகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

* கூட்டத்தை தடுக்க டிக்கெட் விற்பனைக்கு கவுண்டர்கள் நாள் முழுவதும் திறந்து வைக்கப்பட வேண்டும்.

* ரசிகர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும்.

* கொரோனா அறிகுறி இருந்தால் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படக்கூடாது.

* திரைப்படம் துவங்கும் முன்பும் இடைவேளையின் போதும் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்களை திரையிட வேண்டும்.