“பாலியல் வன்புணர்வுக்காக கடத்திச் செல்லப்பட்ட என் 16 வயது மகளை மீட்டுத் தாருங்கள்” என்று, எஸ்.பி. அலுவலகத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோயில் அருகுவிளை பகுதியைச் சேர்ந்த 40 வயதான சரஸ்வதி, தனது கணவர், தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சரஸ்வதியின் கணவர் இறந்து விட்டார். இதனையடுத்து, தனது 16 வயது மகள் மற்றும் 14 வயதில் மகனும், சரஸ்வதி தனியாக வசித்து வந்தார்.

அப்போது, சரஸ்வதியின் பக்கத்து வீட்டில் நடைபெற்ற கட்டட பணிக்கு லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான வேல்முருகன் என்கிற கொத்தனார் வேலை செய்ய வந்தார். அதன் படி, அவர் பக்கத்து வீட்டிலேயே தங்கினார். பக்கத்து வீட்டில் வந்து தங்கியது முதல் அவர் அந்த 16 வயது சிறுமியிடம் நட்பு முறையில் பேசி பழகி வந்தார்.

மேலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவருக்கு ஜாதகமாக இருக்கும் போது, அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்தார் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி, சிறுமியின் தாயாரும் 26 வயதான வேல்முருகன் என்கிற கொத்தனாரை முழுமையாக நம்பி உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 25 ஆம் தேதி பள்ளி விளையில் உள்ள தனது தோழி வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விட்டு மகள் அந்த கொத்தனாருடன் சென்று உள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தாயார், தன் மகளின் தோழி வீட்டுக்குச் சென்று விசாரித்து உள்ளார். அப்போது தோழியானவள், வந்து விட்டு உடனடியாக வீடு திரும்பியதாகவும் கூறியிருக்கிறார். 

இதனால், 26 வயதான வேல்முருகன் என்கிற கொத்தனார், தனது 16 வயது மகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்து உள்ளார். அப்போது, லெவிஞ்சிபுரம் பகுதியிலுள்ள வேல்முருகன், பள்ளிவிளை பகுதியிலுள்ள 50 வயதான மாரி ஆகிய இருவரும் சேர்ந்து அந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி, ஏமாற்றிக் கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளதாக, சிறுமியின் தயாருக்குத் தகவல் கிடைத்து உள்ளது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், “தன் மகள் கடத்தப்பட்டது குறித்து” நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

ஆனால், “அந்த புகாருக்கு காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், காவல் ஆய்வாளர் விடுப்பில் உள்ளார் என்றும், தற்போது காவல் துறையினர் தசரா விழாவிற்குப் பாதுகாப்பிற்குச் சென்றதால், நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் கூறியதாகவும்” கூறப்படுகிறது.  

அத்துடன், அந்த புகாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், மாற்றாக சாதாரண பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும், சிறுமியின் தாயார் குற்றம்சாட்டி உள்ளார்.

இதனால், “16 வயதான எனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்றும், பாலியல் வன்புணர்வுக்காக கடத்திச் செல்லப்பட்ட அந்த இருவரையும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கண்டு இருவரையும் கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட போலீசார், உடனடியாக இத குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.