மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டடப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்ய  திண்டுக்கல், மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக அவர் நேற்று மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு, திண்டுக்கல் சென்று நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் மதுரை சென்று நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வடபழஞ்சியில் கொரோனா சிகிச்சை நல மையத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் கொரோனா நோய்த் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தை நேரில் ஆய்வு செய்து பொதுப் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.

பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, ``ரூ.165 கோடி செலவில் மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் உலகத்தரத்துக்கு தரம் உயர்த்தப்படும். விரைவில் மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டடப் பணிகள் தொடங்கி நடைபெறும். 

மதுரையில் தற்போதுள்ள 84 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது.

ரூ.25 கோடி மதிப்பில் மதுரையில் அமைக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது 

மதுரை மாவட்டத்தில் தினமும் 124 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400-ஆக இருந்தது படிப்படியாகக் குறைந்து, தற்போது 200-க்கும் கீழ் குறைந்துவிட்டது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தேவையான அளவுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மதுரையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அறிய வீடு, வீடாக சென்று சோதனை நடத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் உள்ளன. சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்.

காய்ச்சல் முகாம்கள் நடத்துவதே கொரோனா தொற்று குறைய காரணமாகும். முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயாராக இருக்கின்றன

உலக முதலீட்டாளா்கள் மாநாடு மூலம், ரூ.500 கோடியில் டாஃபே நிறுவனம் மதுரையில் டிராக்டா் உற்பத்தியை தொடங்கியுள்ளது. எச்.சி.எல் நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதேபோல, ஆயத்த ஆடை, மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை விமான நிலைய சாலையை அகலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மதுரையில் கொரோனா நோயாளிகள் 7 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனா். மேலும் பலருக்கு இத்தகைய சிகிச்சை அளிப்பதற்கு பிளாஸ்மா தானம் அளிக்க முன்வர வேண்டும். புதிதாக 500 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு ரூ.103 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

பின்னர் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் ஆகியோருடன் தனித்தனியே முதல்வா் ஆலோசனை நடத்தினாா். அவா்களது கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வா், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.