கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  இபிஎஸ் தரப்பினர் கலக்கத்தில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக அரசியலில் கொடநாடு கொலை - கொள்ளை விவகாரம், மீண்டும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

அதாவது, தமிழகத்தையே உலுக்கிய கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு தொடர்பாக தமிழக காவல் துறையின் மேல் விசாரணைக்குத் தடை  கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. 

இதன் மூலமாக, காவல் துறையினர் அடுத்த கட்ட விசாரணையைத் தொடர முடிவு செய்து உள்ளதால், முக்கிய குற்றவாளி சயனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய விஐபிக்களை விசாரிக்க போலீசார் திட்டமிட்டு வருகிறார்கள். 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கானது, ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, சயான் உட்பட குற்றவாளிகள் 10 பேரும், ஜாமீனில் வெளியே வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கில் “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக” டெல்லியில் இருந்து சயான் பேட்டி அளித்தார்.

இந்த பேட்டி வெளியான அடுத்த சில நாட்களிலேயே, சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

இப்படியாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சயான் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இந்த வழக்கில் மீண்டும் பல உண்மை சம்பவங்கள் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளன. 

இதன் தொடர்ச்சியாக, கடந்த 17 ஆம் தேதி சயானிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சயான் பல புதிய தகவல்களை அளித்திருந்ததாகப் பேசப்படுகிறது. 

அப்போது, “ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரு விஐபி உத்தரவின் பேரில் தான், 2 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கப் பணம், 5 மாஜி அமைச்சர்களின் சொத்து ஆவணங்களை கனகராஜ் எடுத்துச் சென்றதாகவும், அவருக்கு உதவிய நாங்களும் ஜெயலலிதா பயன்படுத்திய சில பொருட்களைக் கொள்ளையடித்தோம்” என்றும், அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தார் என்று, தெரிகிறது.

இந்த நிலையில், ஊட்டி நீதிமன்றத்தில் நேற்றைய தினம் சயான் ஆஜரானார். அங்கு அவர் அளித்த வாக்குமூலம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படித் தாக்கல் செய்யப்பட்டால், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில விஐபிக்களிடம் போலீசார் விசாரணையைத் தொடங்குவார்கள் என்று கூறப்பட்டது.

அத்துடன், கொடநாடு  கொலை - கொள்ளை வழக்கில் காவல்துறை சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், “கொடநாடு கொலை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்டுள்ள மறைந்த கனகராஜ் என்பவரை எனக்குத் தெரியும் என்றும், இந்த  வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதால் தங்கள் விருப்பப்படி வாக்குமூலம்  அளிக்குமாறு பல தரப்பில் இருந்தும் எனக்கு மிரட்டல்கள் வருகிறது” என்றும், குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அரசு தரப்பில்  41 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இதுவரை  குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விசாரணை இன்னும் தொடங்கவில்லை என்றே கூறப்படுகிறது. 

குறிப்பாக, “நீதிமன்ற அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தப்படுகிறது என்றும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி இந்த  வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மேல் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்றும், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு கடந்த 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அனுபவ் ரவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியம் ஆஜராகி, சாட்சியங்கள் யாரிடமும் தெரிவிக்காமல், குற்றம்சாட்டப்பட்ட சிலரிடம் மட்டுமே தெரிவித்துவிட்டு வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதாகக் காவல் துறை, நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது என்றும், அப்படி மனுத்தாக்கல் செய்த அடுத்த நாளே விசாரணைக்கு அழைத்து உள்ளனர்” என்றும் கூறினார்.

இது குறித்து, “விசாரணைக்கு ஆஜராகாமல் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்” என்றும், வாதிடப்பட்டது.

இப்படியாக, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “போலீசார் நடத்தும் மேல் விசாரணையால் நீதிமன்ற விசாரணையில் காலதாமதம் ஆகலாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்” என்றும், குறிப்பிட்டார்.

“மோசமான விசாரணை நடத்தப்பட்டதாக நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்தால், மேல் விசாரணை நடத்தப்படலாம் என்றும்,  இந்த கோரிக்கையை விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்” என்றும், கூறினார். 

“மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திடம் கட்டாயம் அனுமதி பெற்றுத்தான் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை என்றும், எப்போதெல்லாம் குற்ற வழக்கு தொடர்பாக புதிய ஆவணங்கள், சாட்சிகள் கிடைக்கின்றனவோ அது குறித்து மேல் விசாரணை நடத்த விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது என்றும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும், நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், “இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் கிடைக்கலாம் என்றும், இதனால் மேல் விசாரணையை நிராகரிக்க முடியாது” என்றும், நீதிபதி உறுதிப்படத் தெரிவித்தார். 

குறிப்பாக, “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், மேல் விசாரணை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை” என்றும், நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால், இந்த வழக்கு கூடிய விரைவில் இன்னும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, தானாக வந்து சிக்கிக்கொண்டு விட்டதாகத் தமிழக அரசியல் களங்கள் குசுகுசுக்கத் தொடங்கி உள்ளன.