கொரோனா 2-வது அலை உலகம் முழுவதும் உக்கிரமாக பரவி வருகிறது. சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தியேட்டர்களில் பார்வையாளர்கள் 50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் குடும்ப பொழுதுப்போக்கு திரைப்படம் எம்ஜிஆர் மகன். இதில் சத்யராஜும், சசிகுமாரும் அப்பா, மகனாக நடித்துள்ளனர். அப்பா, மகனுக்கிடையில் ஏற்பட்ட சிறிய பிணக்கு எப்படி சுபமாக முடிந்தது என்பது படத்தின் ஒருவரி கதை. 

இந்தப் படத்தை ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்கில் வெளியிடுவதாக முறைப்படி அறிவித்தனர். கொரோனா இரண்டாவது அலை விஸ்வரூபமெடுத்துவரும் நிலையில் இந்த அறிவிப்பை துணிச்சலுடன் வெளியிட்டனர். திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், 50 சதவீத பார்வையாளர்கள், 100 சதவீத என்டர்டெயின்மெண்ட் என விளம்பரப்படுத்தி, வெளியீட்டு தேதியை உறுதி செய்தனர். ஆனால், அரசின் நேற்றைய அறிவிப்பு அனைத்தையும் மாற்றியது.

கொரோனா தொற்று தமிழகத்தில் தினம் பத்தாயிரத்தை தாண்டுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அடைப்பு, இரவு பத்து மணிமுதல் காலை நான்கு மணிவரை ஊரடங்கு என கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், படவெளியீட்டை தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

எம்ஜிஆர் மகன் திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறீர்கள். எம்ஜிஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் மற்றும் வினியோகஸ்தர் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு செய்திருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் விநியோகிஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.