ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி 5 வது முறையாக மும்பை அணி சாம்பியன் பட்டத்தை கைப் பற்றினாலும், இந்த சீசனில் சாதித்த வீரர்கள் யார் யார் என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம். 

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் டெல்லி அணிக்கு எதிராக பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியன்ஸ் அணி, நேற்று வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தன் வசப்படுத்தி இருக்கிறது.

அதே நேரத்தில், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. அதன் படி, நடப்பு சீசனில் விருது பெற்ற வீரர்கள் அதிகம் பேர் இளம் வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர்.

அதன் படி, 

- அதிக ரன்கள் அடித்தவர்களுக்காக வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியானது இந்த சீசனில் கே.எல். ராகுல் வசம் சென்றது. அவர், 14 போட்டிகளில் விளையாடி அதிக பட்சமாக 670 ரன்கள் அடித்து சாதனை படைத்து உள்ளார். 

- அதே போல், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்காக வழங்கப்படும் ஊதா நிற தொப்பியானது இந்த முறை இளம் வீரர் ரபாடா வசம் சென்றது. ரபாடா, இந்த சீசனில் விளையாடி 30 விக்கெட்டுகள் சாய்த்து சாதனை படைத்து உள்ளார். 

- அதே நேரத்தில், வளர்ந்து வரும் இளம் வீரர் விருதானது ஆர்சிபி அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கலுக்கு வழங்கப்பட்டது. 

- இந்த ஐபிஎல் சீசனுக்கான ஃபேர் பிளே விருதானது, மும்பை அணிக்கு வழங்கப்பட்டது.
 
- அதே போல், கேம் சேஞ்சர் விருது, பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது. 
 
- சூப்பர் ஸ்டிரைக்கர் விருதானது மும்பை அணியில் இடம் பெற்ற வீரர் பொல்லார்டுக்கு வழங்கப்பட்டது. 

- இந்த ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர் அடித்த ரசிகர்களை குதுகல படுத்திய வீரருக்கான விருதானது, மும்பை அணியில் இடம் பிடித்திருந்த இளம் வீரர் இஷான் கிஷண்க்கு வழங்கப்பட்டது. அவர், இந்த சீசனில் மட்டும் அதிக பட்சமாக 30 சிக்சர்களை விளாசி தள்ளி உள்ளார். 

- குறிப்பாக, பவர் பிளேயர் விருதானது மும்பை அணியின் டிரெண்ட் போல்ட் வசம் சென்றது.

- இந்த ஐபிஎல் சீசனில் மதிப்பு மிகுந்த வீரர் விருதானது ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு வழங்கப்பட்டது. 

அதே போல், இது வரை நடைபெற்ற ஐபிஎல் சீசனை பொறுத்த வரை சென்னை அணியின் கேப்டன் தோனி, 12 சீசன்கள் கேப்டனாக இருந்து 3 முறை மட்டுமே வெற்றி கோப்பையை வென்று இருந்தார். ஆனால், மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, இது வரை 9 முறை கேப்டனாக இருந்து அதில் 5 முறை மும்பை அணிக்கு கோப்பையை வென்று தந்து உள்ளார்.

மேலும், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக 400 க்கு மேல் ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று உள்ளார். 

அத்துடன், நடப்பு ஐபிஎல் தொடரில் வீரர்கள் அந்தரத்தில் பறந்து அசாதாரணமாகப் பந்தைப் பிடித்துத் தெறிக்க விட்ட பல காட்சிகள், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது.

ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்ஷன் அடித்த சிக்ஸை பஞ்சாப் வீரர் பூரன் அந்தரத்தில் பறந்து தடுத்தது நடப்பு தொடரின் சிறந்த ஃபீல்டிங்காக கொண்டாடப்படுகிறது.

அத்துடன் ஹைதராபாத் அணிக்கு எதிராக ரன்னிங்கில் பறந்து பூரன் பிடித்த கேட்ச் ஹைதராபாத் அணியின் வெற்றியைப் பறித்தது. 

மும்பை அணி வீரர் இஷான் கிஷன் அடித்த பந்தை ஐத்ராபாத் வீரர் மனிஷ் பாண்டே டைவ் அடித்து அற்புதமாக கேட்ச் பிடித்து அதிர்ச்சி அளித்தார். ஐபிஎல் தொடரில் பிடிக்கப்பட்ட சிறந்த கேட்ச் பட்டியலில் இந்த கேட்ச் இடம் பிடித்துள்ளது. அதே போல், மும்பை அணி வீரர் திவாரியை தனது அசாத்திய திறமையால் அந்தரத்தில் டைவ் அடித்து கேட்ச் பிடித்து வெளியேற்றுவார் இளம் வீரர் படிக்கல்.

குறிப்பாக, சி.எஸ்.கே வீரர்களில் டு பிளஸி சிக்ஸ் லைனில் பிடித்த கேட்ச் என்றும் ரசிகர்கள் மனதில் இருந்து விலகாத நினைவாக தற்போது வரை இருந்து வருகிறது. முக்கியமாக, ஜடேஜா சிக்ஸ் லைனில் சறுக்கியே வந்து பிடித்த கேட்ச் நடப்பு தொடரின் தலை சிறந்த கேட்ச் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.