திருப்பத்தூர் அருகே கள்ளக் காதல் மோகத்தில் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவியை கள்ளக் காதலன் உடன் போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். 

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கணவரை கொல்ல முயன்ற மனைவி மற்றும் அவரது நண்பரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த பலப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான விநாயகமூர்த்தி, ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி 32 வயதான வானதி தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். 

இவர் வீட்டில் இருந்து வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தார். அதன் பிறகு வானதி, அவ்வப்போது, மரிமானிக்குப்பத்தைச் சேர்ந்த 29 வயதான ஜெயக்குமார் என்பவரது டிராவல்ஸில் ஆலங்காயத்திற்கு வேலை நிமிர்த்தமாக அவர் ஒரு முறை வந்து சென்றார். அது முதல், வானதிக்கும் ஜெயக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தப் பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதல் வளர காரணமாக அமைந்து போனது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், வானதியின் கணவர் விநாயகமூர்த்தி விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வருகை தந்து உள்ளார். இதனால், வானதியும் அவரது கள்ளக் காதலன் ஜெயக்குமாரும் நேரில் சந்தித்துச் சந்திக்க முடியாமல் தவித்து வந்தனர். இதனால், அவர்களது உல்லாச வாழ்க்கை தடையானது.

வேறு வழியின்றி, அவர்கள் இருவரும் செல்போனில் மட்டுமே பேசி வந்தனர். அப்போது, மனைவி யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசுவதைப் பார்த்த கணவன் விநாயகமூர்த்தி, “நீ யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டு உள்ளார். இதனால், கணவன் - மனைவி இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறி உள்ளது. இது குறித்து, மனைவி வானதி, தனது நண்பர் ஜெயக்குமாரிடம் கணவனின் சண்டை குறித்து கூறியுள்ளார்.

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் சேர்ந்து விநாயகமூர்த்தியை கொலை செய்ய முடிவு செய்து, அதற்கான திட்டத்தையும் தீட்டி உள்ளனர்.

திட்டமிட்டபடி, கடந்த 5 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயக்குமாரை தனது வீட்டிற்கு வரவழைத்த வானதி, அவருடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவர் விநாயகமூர்த்தியின் முகத்தில் தலையணையை அழுத்தி கொலை செய்ய முயன்று உள்ளார். இதில், மூச்சு விட முடியாமல் திணறிய கணவன் விநாயகமூர்த்தி, தப்பிக்கும் முயற்சியில் ஜெயக்குமாரின் கையை கடித்து கடுமையாக காயப்படுத்தி உள்ளார். 

இதில், பலத்த காயமடைந்த ஜெயக்குமார் அங்கிருந்து வலி தாங்க முடியாமல் தப்பி ஓடி உள்ளார். அத்துடன், அங்கு கேட்ட அலறல் சத்தம் காரணமாக, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓட வந்து உள்ளனர். அப்போது, படுக்கையில் கிடந்த விநாயகமூர்த்தி, மூச்சு விட முடியாமல் திணறி உள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், விநாயக மூர்த்தியை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் குறித்து விநாயகமூர்த்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அங்குள்ள ஆலங்காயம் காவல் துறையினர், மனைவி வானதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கள்ளக் காதல் காரணமாக, கணவனை கொலை செய்ய முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார். 

மேலும், அவர் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை, சாமர்த்தியமாக பேசி வரவழைத்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், இருவரும் விநாயகமூர்த்தியை கொலை செய்ய முயற்சித்ததை ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர், இவர்கள் இருவர் மீதும் கொலை முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்து போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர். 

பின்னர், கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி வானதி, கள்ளக் காதலன் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.