ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்த விவகாரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், புகழ்ந்து தள்ளி உள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 13 வது ஐபிஎல் தொடரானது  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில், ப்ளே ஆஃப் சுற்றுக்கூட செல்லாமல், “சென்னை அணி முதன் முதலாக அதுவும் முதல் அணியாகத் தோல்வியோடு வெளியேறியது.

இதனால், “ஐபிஎல் போட்டியில் தோனியின் வியூகங்கள் எங்கே போனது?” என்று கிரிக்கெட் ரசிர்கள் வரிசையாகக் கேள்வி எழுப்பிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொதப்பல்களும் மற்றும் தவறுகளும் என்ன என்பதனை பட்டியல் போட்டார்கள். இதெல்லாம் அப்போது இணையத்தில் வைரலானது.

இப்படியான சூழ்நிலையில், ஐபிஎல் 14 வது சீசனுக்கான மினி ஏலம், சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில், பல அணிகளும் சில முக்கிய வீரர்களைப் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலத்தில் எடுத்தனர். இப்படி, ஐபிஎல் ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்த விவகாரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்.

அதன்படி, இந்த மினி ஏலத்தில் சென்னை அணியானது, மொயீன் அலியை 7 கோடி ரூபாய்க்கும், கிருஷ்ணப்பா கவுதமை 9.25 கோடி ரூபாய்க்கும், ஏலத்தில் எடுத்திருந்தது.

அத்துடன், யாரும் எதிர்பாராத நிலையில், இந்திய வீரர் புஜாராவை அவரின் அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கே சென்னை அணி எடுத்தது. 

குறிப்பாக, “புஜாராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுக்கும் என்று, யாரும் எதிர்பார்க்காத நிலையில், டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரரை ஏன் டி 20 போட்டியில் சென்னை அணி தேர்வு செய்தது” என்று, பலரும் கேள்வியும், விமர்சனமும் எழுப்பினர்.

இந்த நிலையில் தான், சென்னை அணியின் வீரர்கள் தேர்வு பற்றி கருத்து கூறியுள்ள முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் மேக்ஸ்வெல்லுக்கு தான் குறி வைத்தது. ஆனால், அவரை சென்னை அணியால் எடுக்க முடியவில்லை. அவர் அதிக தொகைக்கு ஏலம் போனார். 

இதனால், மேக்ஸ்வெல்லை வாங்கக் கூடிய அந்த தொகையில், சென்னை அணி புத்தசாலிதனமாக யோசித்து மொயீன் அலி மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் என்று, இரு வீரர்களை வாங்கி உள்ளனர்” என்று, பெருமையோடு தெரிவித்தார்.

முக்கியமாக, “ சென்னை அணியின் சிறந்த ஏலங்களில் இதுவும் ஒன்று” என்றும், அவர் புகழாரம் சூட்டினார். 

“3 முக்கிய வீரர்களை மட்டுமே சென்னை அணி எடுத்ததாக அனைவரும் கூறுகிறார்கள் என்று குறிப்பிட்ட கவுதம் கம்பீர், ஆனால், இதுவே சென்னை அணிக்கு போதுமானது” என்றும் அவர் கூறினார். 

மேலும், சென்னை அணியைப் போல் இல்லாமல், ஆர்சிபி, பஞ்சாப் போன்ற சில அணிகள், அதிக தொகைக்கு வீரர்களை ஏலத்தில் எடுத்து உள்ளனர் என்றும், அவர்களை ஒப்பிடும் போது, சென்னை அணி குறைந்த விலையில் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்துள்ளனர்” என்றும், கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டினார்.

அத்துடன், “கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் மொயின் அலி ஆகியோர் சிறந்த தேர்வு என்றும், நிச்சயம் அவர்கள் சென்னை அணிக்காக இந்த முறை நிறையப் போட்டிகளில் களம் கண்டு, வெற்றியைத் தேடித் தருவார்கள்” என்றும், கவுதம்  கம்பீர் சென்னை அணியின் தேர்வு முறையையும், அவர்களது நிர்வாகத்தினரையும் புகழ்ந்து பேசினார். இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.