உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர், கை கால்கள் கட்டப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. அதில், பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அது தொடர்பான சுவடு மறைவதற்குள், அது தொடர்பான சர்ச்சைகள் ஓய்வதற்குள் அடுத்து அடுத்துத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பங்கள் அரங்கேறி வருவது தான் கடும் அதிர்ச்சியையும் பீதியையும் கிளப்பி இருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டம் சத்ரிக் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தன் வீட்டில் வளர்க்கும் கால் நடைகளுக்குப் பயிர்களை வெட்டுவதற்காக, அந்த பகுதியில் உள்ள வயலுக்குச் சென்று இருந்தார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், அந்த சிறுமியை அங்கிருந்து மறைவான இடத்திற்குத் தூக்கிச் சென்று, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

பாலியல் வெறியெல்லாம் தீர்ந்து போன பிறகு, நிதானத்திற்கு வந்த அந்த மிருகங்கள், இந்த சிறுமியை இப்படியே விட்டால் தங்களைக் காட்டிக்கொடுத்து விடுவாள் என்று அஞ்சி, அந்த பெண்ணின் கை மற்றும் கால்களைக் கட்டிப்போட்டு, கழுத்தை நெரித்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அங்கேயே தூக்கி வீசிவிட்டுச் சென்று உள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதியாகச் சென்ற அந்த பகுதி மக்கள், அங்கு இளம் பெண்ணின் சடலம் கிடப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். 

இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலைப் பார்த்து உள்ளனர்.

அப்போது, அந்த பெண்ணின் கை மற்றும் கால்கள் எல்லாம் கட்டப்பட்டு, உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பெண் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கிறாள் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.

அத்துடன், அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன் மகளை காணவில்லை என்று கூறிய நிலையில், அவரை அழைத்து போலீசார் அந்த பெண்ணின் சடலத்தைக் காட்டி உள்ளனர். அப்போது, அந்த பெண்ணின் சடலத்தைப் பார்த்த அந்த நபர், கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தன் மகள் தான் என்று கூறி, கதறி அழுது உள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அந்த சிறுமி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அத்துடன், சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டது.