கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி மத்திய அரசு சார்பில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 'புதிய கல்விக் கொள்கை -2020' க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையை முழுமையாக எதிர்க்க திமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகளும் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினர். 

இந்நிலையில், புதிய கல்விக்கொள்கையால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும்  உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில், புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் அந்த நேரத்தில் வெளியிட்ட அறிக்கையில், ``தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு  போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 1963 ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாகப் பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான  தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாபெரும் தலைவர்கள் வழி வந்த மாண்புமிகு அம்மாவின் அரசு, மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்ட போதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதை சுட்டிக் காட்டி, அதனை தீவிரமாக எதிர்த்தது. மேலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இரு மொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிப்படத் தெரிவித்து 26.6.2019 அன்றே மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை வலியுறுத்தி நான் கடிதம் எழுதினேன். இரு மொழிக்  கொள்கையையே மாண்புமிகு அம்மாவின் அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்பதைக் கடந்த ஆண்டு எனது சுதந்திர தின உரையிலும், சட்டமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போதும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.

தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், மாண்புமிகு அம்மாவின் அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும்,இரு மொழி கொள்கையைப் பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு, மாண்புமிகு அம்மாவின் அரசு தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

இருப்பினும் பாஜக சார்பில் இதற்கு பல கட்ட எதிர்ப்புகள் வெளிவந்தன. எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், இன்றைய தினம் இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.
 
தன்னுடைய அந்தக் கடிதத்தில்,

``புதிய கல்விக்கொள்கையில் உள்ள நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். தமிழகத்தில் இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இருமொழி கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கும்.

கல்விக்கொள்கையின் இலக்கை நடப்பாண்டிலேயே தமிழகம் சாதித்து காட்டியுள்ளது. 2035க்குள் கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகிதத்தை 50% ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், புதிய கல்விக்கொள்கையின் இலக்கை 2019-2020-ம் ஆண்டிலேயே தமிழகம் எட்டிவிடும். தேசிய அளவில் 26 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என உள்ள ஆசிரியர், மாணவர்கள் விகிதாச்சாரம், தமிழகத்தில் 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என உள்ளது.

தேசிய தேர்வுகளுக்கான நுழைவுத்தேர்வுகள் மாணவர்களுக்கு மேலும் சுமையாக இருக்கும். தேசியதேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். நுழைவுத்தேர்வு நடத்துவதை தமிழக அரசு ஏற்காது" எனக் கூறியிருக்கிறார் அமைச்சர்.

இதன்மூலம் எதிர்காலத்திலும் இருமொழி கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கும் என்றும் நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.

இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதால் அதனை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என அக்கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அவர்.