இலங்கையைக் கடந்த பிறகு தமிழக கடற்பகுதிக்கு வந்த புரெவி புயல் இன்று (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இருப்பினும், தொடர் சூறாவளி காற்று மற்றும் கனமழையினால் குருசடை தீவில் படகுகள் சேதமடைந்து சில மரங்கள் வேரோடு சாய்ந்தன.

தமிழகத்தில் கடந்த நவம்பர் முதல்வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாகப் பெய்து வருகிறது. ‘நிவர்’ புயலைத் தொடர்ந்து வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி டிசம்பர் 1 அன்று ‘புரெவி’ புயலாக மாறியது.

இலங்கைக்கு கிழக்கே மையம் கொண்டிருந்த இந்த புரெவி புயல் புதன்கிழமை இரவு இலங்கையில் திரிகோணமலையைத் தாக்கி கரையைக் கடந்தது. தொடர்ந்து புரெவி புயல் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு நகர்ந்தது. இந்த புரெவி புயல் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடந்து பின்னர் அரபிக்கடலுக்குச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இலங்கையைக் கடந்த புரெவி புயல் சற்று திசை மாறி வடமேற்கு நோக்கி பயணித்து வியாழக்கிழமை பாம்பன் அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டது. தொடர்ந்து சனிக்கிழமை காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிலுந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக ராமநாதபுரம் அருகே 40 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் 30 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருவதாகவும் பாம்பன் வழியாக மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து கேரளப் பகுதியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக நான்காவது நாளாக இன்று (சனிக்கிழமை) ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் கடற்பகுதியில் கனமழை பெய்தது. தொடர் கனமழை மற்றும் சூறாவளிக் காற்றினாலும் ராமேசுவரம் அருகே உள்ள குருசடை தீவில் உள்ள கட்டங்கள், சுற்றுலா படகு மற்றும் மீனவர்களின் படகுகள் சேதடைந்தன. சேதங்களை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு தலைமை செயலகத்தில் இன்று காலை புரெவி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் பிறகு முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் புரெவி புயல் மற்றும் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு தான் மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்தும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புயல் மற்றும் கனமழை காரணமாக 37 பசு மாடுகள், 7 எருமை மாடுகள், 4 எருதுகள், 22 கன்றுகள் மற்றும் 123 ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் புரெவி புயல் காரணமாக 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1,725 குடிசை வீடுகள், 419 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாகவும் அதற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி பல்வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பின்வருமாறு;-

``* சென்னை - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் நியமனம்

* கடலூர் - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

* திருவாரூர் - உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

* நாகப்பட்டினம் - நகராட்சி நிர்வாதத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

* செங்கல்பட்டு, காஞ்சிபுரம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நியமனம்"

இவ்வாறு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது