மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தன்னை தானே தெய்வமாகப் பாவித்த தாய் ஒருவர், பெற்ற மகனை வெட்டி பலி கொடுத்த சம்பவம் கடும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள கோஹ்னி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான சுனியாபாய் லோதி என்ற பெண், தனது கணவன் மற்றும் தனது மகன் துவாரகா உடன் வசித்து வந்தார். மிகவும், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களது குடும்பத்தில் யார் கண்ணு பட்டதோ தெரிய வில்லை. ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதுவும் பெற்ற தாயே, தன் மகனை வெட்டி மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார்.

அதாவது, 50 வயதான சுனியாபாய் லோதி, தன்னை தானே “பெண் தெய்வமாக நினைத்துக் கொண்டு வாழ்ந்து” வந்திருக்கிறார். 

வட மாநில தெய்வங்களுக்கு சிலர் தொடர்ச்சியாக எதாவது ஒரு உயிரை பலிகொடுப்பது வழக்கமான ஒரு சடங்காக இருந்து வந்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன்னை தானே “பெண் தெய்வமாக நினைத்துக் கொண்டு வாழ்ந்து” வந்த 50 வயதான சுனியாபாய் லோதி, இரவு நேரத்தில் வீட்டில் தனது கணவனின் அருகில் தூங்கிக்கொண்டிருந்த தனது 24 வயதான மகன் துவாரகாவை, கோடாரியால் வெட்டி, கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார். இதில், பயங்கர அலறல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில் அப்படியே அந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மகனின் அலறல் சத்தம் கேட்டு கண் விழிந்த அவனின் தந்தை, கண் முழித்துப் பார்த்த போது, மனைவி சுனியாபாய் லோதி, ரத்தம் சொட்டச் சொட்ட கையில் கோடாரியோடு நின்றுகொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்துத் திடுக்கிட்ட அவரது கணவன், “நீ என்ன செய்திருக்கிறாய் தெரியுமா? மகனை ஏன் கொன்றாய்” என்று, ஒரு வித பயத்துடன் கேட்டு உள்ளார். 

அதற்குத் துளியும் சலனம் இல்லாமல் பதில் அளித்த சுனியாபாய் லோதி, “நான் தெய்வம். எனக்காக என் மகனை நான் பலியிட்டுக்கொண்டேன்” என்று, இயல்பாகப் பதில் அளித்து இருக்கிறார். இதனால், பயந்துபோன அந்த பெண்ணின் கணவன், பீதியடைந்து வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்குக் கூடி நின்று உள்ளனர். இதனையடுத்து, அவர் நடந்ததை ஊர் மக்களிடம் கூறி உள்ளார். இது தொடர்பாக ஊர் மக்கள் அங்குள்ள காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

இது தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுனியாபாய் லோதியை கைது செய்தனர். அத்துடன், உயிரிழந்த துவாரகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், கைது செய்யப்பட்ட  சுனியாபாய் லோதியிடம் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கொலை சம்பவம் குறித்துப் பேசிய அந்த கிராமத்தில் வசிக்கும் ராம் பகத் என்பவர் கூறும் போது, “சம்பவம் நடந்த நேரத்தில், சுனியாபாயின் கணவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்து உள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கேட்ட போது, “தான் அவனைப் பலியிட்டதாக” கூறி உள்ளார். இச்சம்பவம் குறித்து கிராமமே பீதியில் உள்ளதால், கிராமத்தில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர்” என்று கூறினார். இதனால், அங்கு பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.