இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தன்னை செதுக்கி கொண்டவர் ஜிவி பிரகாஷ் குமார். வரிசையாக படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் இயக்கத்தில் தலைவி மற்றும் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஹாலிவுட்டில் உருவான ட்ராப் சிட்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதன் மூலம் முதல் முதலாக ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். 

இந்த படத்தை தொடர்ந்து ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், காதலைத் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாரும் இல்லை, 4G, காதலிக்க யாரும் இல்லை, பேச்சலர் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார். தனது ரசிகர்கள் கேள்விக்கு வீடியோ மூலம் அட்டகாசமாக பதில் அளித்து வருகிறார். அப்போது தல அஜித் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சுதா கொங்கரா கதை என்கிட்ட சொல்லிட்டாங்கன்னு ருசிகர தகவல் ஒன்றை போட்டு உடைத்துள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித்தை இரண்டாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கி வருகிறார். வலிமை என தலைப்பிடப்பட்டுள்ள அந்த படம் குறித்த வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியிடப்படாமல் சூப்பர் சைலன்ஸ் காக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதம் மீண்டும் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாட்களாகவே தல அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட்கள் கசிந்து வருகின்றன. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தான் அஜித் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வேற லெவலில் எதிர்பார்ப்புகளை கிளப்பி வருகின்றன. இது உண்மையா, வதந்தியா என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில், தனது ரசிகர்களுடன் கலந்துரையாட முடிவு செய்த ஜி.வி. பிரகாஷ், ட்விட்டரில் வீடியோ மூலம் அவர்களது கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், ஒரு தல ரசிகர், அஜித் - சுதா கொங்கரா படம் இருக்கா? இல்லையா? என்று கேட்க, சற்றும் மழுப்பாமல், அந்த படம் வந்தா வேற லெவலில் இருக்கும் என ஜி.வி. பிரகாஷ் குமார் கூறி இருப்பது தல ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை போலவே அஜித் - சுதா கொங்கரா படமும் இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும். என்கிட்ட சுதா கொங்கரா அந்த படத்தோட கதையை சொல்லிருக்காங்க, அந்த ப்ராஜெக்ட் மட்டும் ஓகேவான சும்மா வேற லெவலில் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

தல அஜித் உடன் கிரீடம் படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றி சொல்லுங்க, அஜித் பற்றி சொல்லுங்க என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இசையமைப்பாளராக தனது முதல் படம் வெயில் படத்தில் வொர்க் பண்ணி முடித்ததும், தல அஜித்தின் கிரீடம் பட வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நான் இசையமைத்த அத்தனை பாடல்களையும் அஜித் பாராட்டினார். அஜித் அவர்களின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ரிங் டோனே கனவெல்லாம் பலித்தது பாடல் தான் என்றும் ஜி.வி. கூறி தல ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். மேலும் லைவ்வில் சூரரைப் போற்று திரைப்படம் பற்றியும், வெற்றிமாறன் மற்றும் தளபதி விஜய் படம் பற்றியும் பேசியுள்ளார்.