ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பட்டியலில் இந்தியா 86 வது இடத்தில் உள்ளது.

உலகளாவிய ஊழல் எதிர்ப்பு இயக்கமான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்கிற அமைப்பானது சுமார் 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், அந்தந்த நாடுகளில் அரசு நிர்வாகத்தில் நடைமுறையில் இருக்கும் ஊழல் விசயங்களைப் பற்றி ஆய்வு செய்தது.

அதன் படி, 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட அந்த அமைப்பு, “ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியல் 2020” என்ற தலைப்பில் தற்போது வெளியிட்டு உள்ளது. 

அந்த வகையில், அந்த அமைப்பின் ஊழல் குறியீட்டு பட்டியலில் ஒவ்வொரு நாடும் பெற்றுள்ள புள்ளிகளுக்கு ஏற்றவாறு, தர வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது. 

அதாவது, ஊழல் குறியீட்டு பட்டியல் என்பது, '0' புள்ளி - மிகுந்த ஊழல் உள்ள நாடு '100' புள்ளிகள் என்கிற வகையில், ஊழல் அற்ற நாடுகளின் இந்தப் பட்டியலில் இந்தியா 40 புள்ளிகளைப் பெற்று, 180 நாடுகளில் சரியாக 86 வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த பட்டியலில், நியூசிலாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் 88 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், சோமாலியா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகள் 12 புள்ளிகளைப் பெற்று 179 ஆம் இடத்தையும் பிடித்திருக்கின்றன. 

மேலும், “ஊழல் குறியீட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளின் புள்ளிகள், அந்தந்த நாட்டில் நிலவும் துல்லியமான ஊழல் அளவைக் குறிக்கவில்லை என்றும், மாறாக அந்த நாட்டில் நிலவும் ஊழலுக்கான சூழ்நிலையைப் பிரதிபலிக்கிறது” என்றும், நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

அதே நேரத்தில், கடந்தாண்டு இது தொடர்பாக வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியாவும், சீனாவும் 80 வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

அதே போல், யுனிசெப் மற்றும் மக்கள் தொகை கவுன்சில் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் ஆய்வு நடத்தி அக்டோபர் மாதம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், “கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து, இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் என்ற நெருக்கடி அதிகரித்துள்ளதாக” கவலைத் தெரிவித்திருந்தது. 

அதில், பெரும்பாலான குழந்தைகள் ஜார்க்கண்ட் அல்லது பீகார் போன்ற ஏழை மாநிலங்களின் கிராமப்புறங்களிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்ற புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

மேலும், “இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாள்தோறும் 381 பேர் தற்கொலை செய்து கொண்டதாக” குற்ற ஆவணக் காப்பகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிர்ச்சிகரமான புள்ளி விவரத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.