இன்று கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி, பட்ஜெட் கூட்டத் தொடருக்கான முன் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 

இந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. அதன் படி, நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. 

இந்த கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார். 

இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் உரையில், “நாட்டின் உள்கட்டமைப்பு, பொருளாதாராம், கொரோனா தடுப்பூசி உள்பட பல்வேறு விவகாரங்கள் இடம்பெறும்” என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வானது இன்று முதல் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதில், முக்கியமாக வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி, மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

கொரோனாவுக்கு பிந்தைய இந்தியப் பொருளாதாரத்தை அனைத்து பிரிவுகளிலும் மீட்டெடுக்கும் வகையில், இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் மிகவும் திருப்பு முனையாக அமையும் என்றும், பாஜக கூறியிருந்தது. 

இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ணா அகர்வால், “மோடி அரசு சீர்திருத்தங்களின் பாதையில் வெற்றி நடைபோடுகிறது என்றும், இந்த இக்கட்டான நிலையை அப்படியே விடாமல் புதிய மாற்றங்களைக் கொண்டுவரப் பிரதமர் மோடி முடிவு செய்து விட்டார் என்றும்,  கடந்த 2014 ஆம் ஆண்டு ஜன் தன் யோஜனா, பிஎம் கல்யாண் யோஜனா ஆகிய திட்டங்களைத் தொடங்கினார் என்றும், நல்ல பொருளாதாரமே நல்ல அரசியல்.  இது தான் பிரதமர் மோடியின் குறிக்கோள்” என்றும், அவர் தெரிவித்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இன்று குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட 16 முக்கிய கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உறுதிப்படுத்தி உள்ளார். 

இது குறித்து  பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், “16 அரசியல் கட்சிகளின் சார்பில், நாங்கள் ஒரு அறிக்கையை வெளியிடுகிறோம். 

அதன்படி, நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்கிறோம்” என்று, குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக, “புதிய வேளாண் சட்டங்களில் உள்ள விவசாய மசோதாக்களை எதிர்க்கட்சிகள் இல்லாமல் பலவந்தமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது தான், இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.