“மும்பை மனித தன்மையை இழந்து விட்டது என்றும், அப்பாவி குடிமகன்கள் வாழ பாதுகாப்பற்ற நகரமானது மும்பை” என்றும், மஹாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ள சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி திரைப்பட உலகில் வளர்ந்து வந்த இளம் நடிகர் 4 வயதான சுஷாந்த் சிங், கடந்த ஜூன் 14 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் சுஷாந்த் சிங், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும், தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே, சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியானது. இதே கோணத்தில் தான், மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நாள்தோறும் புதிய புதிய செய்திகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இதனால், சுஷாந்த் சிங் மரணத்தில் பலவித சந்தேகங்களும் எழுந்துள்ளன. 

மேலும், சுஷாந்த் சிங் காதலியான நடிகை ரியா சக்கரபோர்த்தி மீது, சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில், “தற்கொலைக்குத் தூண்டுதல், திருட்டு, மோசடி” உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை ரியா சக்கர போர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது பாட்னா போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

எனினும், இது வரை இந்த வழக்கில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான இந்த வழக்கை, சி.பி.ஐ. விசாரிக்க கோரி பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.

இதன் காரணமாக, மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ், இந்த வழக்கு கையாளப்படும் விதம் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

அதில், “சுஷாந்த் சிங் மரண வழக்கை மும்பை பெருநகர போலீசார் கையாளும் முறையைக் கவனிக்கும்போது, மும்பை அதன் மனிதத் தன்மையை இழந்து விட்டது” என்று, குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “ஒன்றும் அறியாத அப்பாவி மற்றும் சுயமரியாதை கொண்ட குடிமகன்கள் வாழ்வதற்கு மும்பை பாதுகாப்பற்ற நகராகி விட்டது” என்றும், அவர் விமர்சனம் செய்துள்ளார்.

அம்ருதா பட்னாவிஸின் இந்த கருத்து, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மஹாராஷ்டிர அரசியலிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

அதன்படி, “இது வரை அம்ருதாவை பாதுகாத்து வந்த அதே போலீசார் பற்றி அம்ருதா விமர்சனம் செய்கிறார்” என்று, ஆளும் சிவசேனா கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

அத்துடன், “முன்னாள் முதலமைச்சரின் மனைவியாக இருந்து கொண்டு, இது போன்று பேசுவது வெட்கப்பட வேண்டிய விஷயம்” என்று, சிவசேனாவின் மேலவை எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி, விமர்சித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது, சிவசேனாவை சேர்ந்த மஹாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அனில் பரப், “மும்பை போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றால் அம்ருதா பட்னாவிஸ், மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்” என்று, ஆவேசமாகக் கூறியுள்ளார்.

மேலும், “கடந்த ஆண்டு தான் மாநில அரசு மாறி உள்ளது. ஆனால், அதே போலீசார் தான் தற்போது பாதுகாப்பு பணியில் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக அவரை பாதுகாத்து வந்த, தொடர்ந்து அவரை பாதுகாத்து வரும் போலீசார் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவர் இந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்” என்று நினைக்கிறேன், என்றும் கூறியுள்ளார்.

“ஆட்சியை இழந்த விரக்தியில் அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்றும், இதில் 100 சதவீதம் அரசியல் உள்ளது” என்றும், அனில் பரப் குற்றம்சாட்டி உள்ளார்.