கொரோனா பாதிப்பால் உலகளவில் இதுவரை, 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்த தொற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தடுப்பூசியை விரைவாக கண்டுபிடிப்பதை விட, பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 

இதற்கிடையே கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாகவும், இந்த ஆண்டு அது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா அறிவித்தது. இதனை அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் விமர்சித்தன. ரஷ்யாவின் தடுப்பூசியில், மிகக்குறிப்பிட்டு அதன் பாதுகாப்பு தன்மை விமர்சிக்கப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்டு குறிப்பிடுகையில், `முகக்கவசம் மிக முக்கியமானது' என தெரிவித்தார். கொரோனா தடுப்பூசியை விட முகக்கவசம் அணிவது அதிக பலன்களை கொடுக்கும் என கூறியிருந்தார். ஏனென்றால் அந்த தடுப்பூசியில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறியான ஒன்று என்று குறிப்பிட்டார் அவர். இந்தக் கருத்துக்கு அதிபர் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். தடுப்பூசியை விட முகக்கவசம் பயனுள்ளதாக இருக்காது என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் தரப்பில், உயிரைக் கொல்லும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களில் தயாராகிவிடும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுகாதார அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களின் கணிப்பை சுட்டிக்காட்டி அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். மேலும் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அக்டோபர் மாத இடையில், இந்த தடுப்பூசி விநியோகத்துக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் கூறுகையில், ‘முகக்கவசம் அணிவதில் நிறைய சிக்கல் உள்ளது. அதனை கவனமாக கையாள வேண்டியது அவசியம் . தடுப்பூசியை விட முகக்கவசம் முக்கியமானது இல்லை. முகக்கவசம் அணிவதை நிறைய பேர் விரும்புவதில்லை. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அதிக திறன் வாய்ந்ததாக இருக்கும். அதில் எந்த பிரச்சனையும் இருக்காது’ என்றார்.

முகக்கவசம் அணிவதால் பலன் இல்லை என அதிபர் ட்ரம்ப் தொடக்கம் முதலே கூறி வருகிறார். பெரும்பாலான நேரங்களில் வெளியே செல்லும் போது அவர் முகக்கவசம் அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறவிருப்பதாக அமெரிக்க அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது என்பதால், இந்த தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்தோடு சேர்ந்து இயங்காது என சொல்லப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் ஏராளமான சீர்திருத்தங்கள் தேவை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜூட் டீர் பேசியபோது, ``கொரோனாவை வீழ்த்த சர்வதேச கூட்டணி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும். ஊழல் நிறைந்த உலக சுகாதார மையமும், சீனாவும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களுடன் அமெரிக்கா இணையாது. புதிய கோவிட்-19 தடுப்பூசி அமெரிக்க தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதையும், உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதையும் அதிபர் நிச்சயமாக உறுதிசெய்வார்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் உடனடி உலகளாவிய தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றாலும், எந்தவொரு தடுப்பூசியும் அல்லது நிறுவனமும் மட்டுமே, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று சனோஃபி பாஸ்டரின் நிர்வாக துணைத் தலைவர் தாமஸ் ட்ரையம்பே கூறியுள்ளார். இருப்பினும், தடுப்பூசிகள் மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்று, உலக சுகாதார நிறுவனமும் அறிவித்திருந்தது.

இப்போதைக்கு உலகளைவில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு பகுதியாக, ஆக்ஸ்ஃபோர் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்கான உலகளாவிய மக்கள் மீதான சோதனையிலும், இந்தியா பங்கெடுத்து வருகின்றது.