தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மக்களின் மனதில் இடம்பெற இருந்த அறிமுக நடிகர் சுராஜ் குமார் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் தற்போது அவருடைய கால் ஒன்று நீக்கப்பட்டு இருக்கிறது. கன்னட சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாசன் அவர்கள். இவரது மகனான சுராஜ் குமார் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்காக தனது பெயரை துருவன் என மாற்றி இருக்கிறார். முன்னதாக கன்னட சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவரான நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடித்த அயராவதா மற்றும் தாரக் ஆகிய திரைப்படங்களில் சுராஜ் குமார் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தொடர்ந்து கன்னட சினிமாவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக இருந்தார். இயக்குனர் அனுப் ஆண்டனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ரதம் எனும் மற்றொரு திரைப்படத்திலும் நடிப்பதற்காக சுராஜ் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த படத்திற்கான அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நடிகர் சுராஜ் குமார் திடீரென விபத்தில் சிக்கி இருக்கிறார். நடிகர் சுராஜ் குமார், கன்னட சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரும் தமிழில் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருப்பவருமான சிவராஜ்குமார் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் சுராஜ் குமார் தொடர்ந்து பைக் ரைடிங் செய்து வருவதை தனது வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஊட்டிக்கு பைக்கில் சென்ற சுராஜ் குமார் ஊட்டியில் இருந்து மைசூர் திரும்பும் போது விபத்துக்குள்ளாகி இருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை ஊட்டியில் இருந்து மைசூர் சென்று கொண்டிருந்தபோது குந்தல்பேட் என்ற பகுதியில் ஒரு டிராக்டரை ஓவர் டேக் செய்ய முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்த நடிகர் சுராஜ்குமாரின் இருசக்கர வாகனம் எதிரே வந்த ஒரு டிப்பர் லாரியில் மோதியது. இதில் சுராஜ் குமாரின் காலில் டிப்பர் லாரியின் சக்கரம் ஏறியதில் கால் நசுங்கியதோடு உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து உடனடியாக மைசூரில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடிகர் சுராஜ் குமாருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

நடிகர் சுராஜ் குமாரின் வாகனத்தில் மோதிய டிப்பர் லாரியின் ஓட்டுனர் மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகர் சுராஜ் குமாரின் உயிரை காப்பாற்றுவதற்கு அவரது நசுங்கிய ஒரு காலை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட காரணத்தினால் தற்போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சுராஜ்குமார் அவர்களின் ஒரு காலை நீக்கி உள்ளனர். முன்னதாக நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவியோடு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சுராஜ் குமார் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்து சென்றார். நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பே ஒரு காலை எழுந்துள்ள நடிகர் சுராஜ் குமாருக்கு வயது 24. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் சுராஜ்குமார் விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வர கலாட்டா குழுமம் வேண்டிக்கொள்கிறது.