தமிழ் சினிமாவில் வராலாற்று சார்ந்தும் தமிழ் கலாசாரம் சார்ந்தும் திரைப்படங்கள் வருவது அரிது.. அதையும் மீறி வரும் திரைப்படங்கள் வெகுஜன மக்களின் கவனத்தை பெறுவதும் சமகாலத்தில் கடினமாகவே உள்ளது. மேலும் பட்ஜெட் ரீதியாகவும் அந்த படத்தை ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க நிறைய சிக்கல்கள் உள்ளது. இதனிடையே சம காலத்தில் குறைந்த அளவு பட்ஜெட் கொண்டு அட்டகாசமான வரலாற்று கதைகளத்தை கொண்டு வெளியான திரைப்படம் ‘யாத்திசை’. இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டாமாக உருவான யாத்திசை திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 21 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவினை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத வகையில் இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் யாத்திசை பட இயக்குனர் தரணி ராசேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு யாத்திசை படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவரது அடுத்த படம் குறித்து பேசுகையில், "அடுத்த படத்திற்கான கதையை யோசித்து கொண்டிருக்கிறேன். கண்டிப்பா அது வித்யாசமான படமாக இருக்கும். அதற்கான 2,3 திட்டம் இருக்கு. சீக்கிரம் அதை தொடங்க வேண்டும் என்று தோன்றுகிறது. அடுத்த படத்தில் இந்த படத்தில் இருந்த தவறெல்லாம் சரி செய்ய வேண்டும்." என்றார் இயக்குனர் தரணி ராசேந்திரன்.

பின் தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்து பேசுகையில், "நான் யாத்திசை படம் எழுதும் போதே 3,4 பாகமாக தான் எழுதுனேன். இந்த படத்திற்கு முந்தைய பாகமே இருக்கு.. படத்தோட அடுத்தகட்டம் எடுப்பதற்கு முன்பு யாத்திசை படத்தோட முந்தைய கதையைதான் படமாக எடுப்பேன். படத்தின் முதல் காட்சியில் ஒரு அனிமேஷன் காட்சி வரும் அது தான் படமாக கொண்டு வந்து கொடுத்துட்டு அதன்பின் தான் அடுத்த கட்ட கதையை பண்ணனும் அதுதான் நல்லாருக்கும்னு தோனுது.. இதுலையும் பட்ஜெட்தான் தேவைபடுது.. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வணிக ரீதியா வெற்றி பெற்றா அடுத்த பாகமும் எடுத்தலாம்." என்றார் இயக்குனர் தரணி ராசேந்திரன்

மேலும் இயக்குனர் தரணி ராசேந்திரன் அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் யாத்திசை திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..