தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமான நடிகராய் வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கமர்ஷியல் திரைப்படங்களில் மாஸ் நாயகனாக மட்டுமல்லாமல் கதைக்கு தேவையான எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கச்சிதமான நடிப்பை வெளிபடுத்தி சிறந்த நடிகராகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதன்படி பல பிளாஸ் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான விக்ரம், மாமனிதன், கடைசி விவசாயி, காத்து வாக்குல ரெண்டு காதல், 19 மற்றும் DSP ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தனர். அதை தொடர்ந்து இந்த ஆண்டு ‘மைக்கேல்’, விடுதலை, யாதும் ஊரே யாவரும் கேளிர், மும்பைகர் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து வரும் ஜவான் படத்தில் வில்லனாகவும் காந்தி டாக்கீஸ் என்ற மௌன படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே விஜய் சேதுபதியின் 50 வது படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. குரங்கு பொம்மை இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் அடுத்த திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’ படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பிரபலமடைந்த அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் காதல் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. டிப்ஸ் பிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய பூஜா லதா சூர்தி படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு பிரீதம் இசையமைத்து வருகிறார். தமிழில் பாடல்களுக்கு பாடலாசிரியர் யுக பாரதி வரிகர் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் என முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது. பின்னர் சில சிக்கல்களினால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட வேலைகள் நிறைவடைந்து மெரி கிறிஸ்மஸ் படத்தை படக்குழு வெளியிட முன்வந்துள்ளனர். ரிலீஸ் குறித்து வெளியான அறிவிப்பில், வரும் டிசம்பர் 15ம் தேதி தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவான மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது குறித்து வெளியான தகவலை ரசிகர்கள் தற்போது இணையத்தில் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.