தமிழ் சினிமாவில் தொடர் பிரபலங்களின் மறைவு ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ரசிகர்கள் பெரிதும் ரசித்து கொண்டாடிய நட்சத்திரங்களின் மறைவு ரசிகர்களை வருத்தமடைய செய்து வருகிறது. கடந்த 2021 ம் ஆண்டு பிரபல நகைசுவை நடிகர் விவேக் தொடங்கி மயில்சாமி, இயக்குனர் டிபி கஜேந்திரன், பின்னணி பாடகி வாணி ஜெயராம் மற்றும் சமீபத்தில் மறைந்த இயக்குனரும் நடிகருமான மனோபாலா வரை திரையுலகம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் பழம்பெரும் நடிகை வசந்தா அவர்கள் உடல்நல குறைவினால் நேற்று காலாமானார். இந்த செய்தி திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜா பாகவதர் நாடக குழுவில் நடிப்பினை பயின்று பல நாடக மேடைகளை ஏறி பின் திரையுலகில் நுழைந்தவர் நடிகை வசந்தா. 1965 ல் ஜெய் சங்கர் நடிப்பில் இயக்குனர் ஜோசப் தைலத் இயக்கி வெளியவந்த இரவும் பகலும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகை வசந்தா. அதன்பின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த வசந்தா இடையே குணசித்திர கதாபத்திரங்களையும் ஏற்று நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை வசந்தா. 1981 ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘இராணுவ வீரன்’ படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவிக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிட்டதக்கது.

பழம்பெரும் நடிகையாக தமிழ் திரையுலகில் இருந்து வந்த நடிகை வசந்தா நேற்று உடல்நலகுறைவினால் காலமானார். அவருக்கு வயது 82. இன்று அவரது இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது. நடிகர் கார்த்தி உள்ளிட்ட திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சில திரை உலகை சேர்ந்தவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.