தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பளர்களுக்கு முக்கியமான கிட்டாரிஸ்ட்டாக பல ஆண்டுகளாக பணியாற்றியவர் ஸ்டீவ் வாட்ஸ். அதன்படி ஹாரிஸ் ஜெயராஜ், ஏஆர் ரஹ்மான், அனிரூத், இளையராஜா, கார்த்திக் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஜிப்ரான் மற்றும் இமான் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். கிட்டார் இசை கலைஞராக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இயக்குனர் ராத மோகன் இயக்கத்தில் வெளியான உப்பு கருவாடு படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடதக்கது.

ஸ்டீவ் வாட்ஸ் சென்னையை சொந்த ஊராக கொண்டவர். சிறு வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்ட அவர் கிட்டார் வாசிப்பதில் ஈடுபாடுடன் இறங்கினார். அதன்படி பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து ரசிகர் மத்தியில் பிரபலமடைந்தார். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் சில ஆல்பங்களுக்கு கிடார் வாசித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. கடந்த 2008 ம் ஆண்டு லிங்கு சாமி இயக்கத்தில் வெளியான பீமா படத்தின் மூலம் அப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இவரை தமிழ் சினிமாவில் கிட்டாரிஸ்ட்டாக அறிமுகம் செய்து வைத்தார்.

பின் தொடர்ந்து நீதானே என் பொன் வசந்தம், போடா போடி, மரியான், துப்பாக்கி, என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார். இதில் குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கடந்த 2008 ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் இடம் பெற்றிருக்கும் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, அடியே கொல்லுதே, பாடலுக்கு கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அட்டகாசமான ஒலிவடிவத்தை இன்னும் ரசிகர்கள் மறந்ததில்லை. சொல்லப் போனால் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலில் வரும் கிட்டார் ஒலி இன்னும் பலரது ரிங் டோனாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ரசிகர்களின் மனதை கிட்டார் வடிவத்தில் கவர்ந்து வந்த ஸ்டீவ் வாட்ஸ் திரையுலகத்தை இன்று சோகத்தில் மூழ்கடித்துள்ளார். உடல்நல குறைவினால் மறைந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 43 வயதே ஆன ஸ்டீவ் வாட்ஸ் முன்னதாக கிட்டார் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு அவரது ரசிகர்கள் மாணவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல்களை தெர்வித்து வருகின்றனர்.

#RIPSteevevatz sir pic.twitter.com/o1Cjo5M0DL

— Deepak (@xavierdeepak) March 23, 2023